வேட்பாளரின்றி அதிகாரிகள் சீல் பாஜக வேட்பாளர் குற்றச்சாட்டு
![]()
ஆவடி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறைக்கு வேட்பாளரின்றி அதிகாரிகள் சீல் வைத்ததாக பாஜக வேட்பாளர் குற்றச்சாட்டு : காவல்துறை அனுமதிக்காமல் அலைக்கழித்ததால் முறைகேடுக்கு வாய்ப்பு :
திருவள்ளூர் ஏப் 26 : ஆவடி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறைக்கு வேட்பாளரின்றி அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக கூறியதோடு, காவல்துறை அனுமதிக்காமல் அலைக்கழிப்பு செய்ததால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக பா.ஜ.க வேட்பாளர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய நான்கு தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் கல்விக்குழும வளாகத்திலும், அதேவளாகத்தில் மற்றொரு பகுதியில் அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அதிகாலையில் சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆவடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் ராஜசிம்ம மகேந்திரா என்ற அஸ்வின் போட்டியிட்டார். ஆவடி தொகுதியில் பதிவான வாக்கப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறைக்கு சீல் வைக்கும் போது பாஜக வேட்பாளருக்கு, அவரது அங்கீகரிக்கப்பட்ட முகவருக்கோ முறையாக தகவல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அதிகாலை 5.30 மணி அளவில் அவசர அவசரமாக சீல் வைப்பதாக வந்த தகவலையடுத்து வந்த போது பாஜக முகவர்களை தமிழ்நாடு காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க வில்லை என கூறப்படுகிறது. ஆனால் 8 மணி அளவில் திமுகவினர் மட்டுமே உள்ளே சீல் வைக்கும் அறைக்கு அருகே இருந்துள்ளனர்.இதுகுறித்து காவல் துறையினரிடம் விளக்கம் கேட்டதற்கு முறையான பதில் அளிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த தேர்தல் பார்வையாளரிடம் முறையிட சென்ற பாஜக வேட்பாளரின் கோரிக்கையை காது கொடுத்து கேளாமல் சென்ற அதிகாரியால் அதிருப்தி அடைந்து, மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியருமான மு.பிரதாப்பிடம் தொலைபேசியில் புகார் தெரிவித்த போது இது வழக்கமான நடவடிக்கை தான் என்று பதில் கூறியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

