அசல் ஆவணம் இல்லாமல் பதிவு முடியாது FAIRA வழக்கு
![]()
அசல் ஆவணம் இல்லாமல் பதிவு முடியாது: புதிய சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் FAIRA வழக்கு
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ள பதிவு சட்டத் திருத்தம் (பிரிவு 34-C) பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தி வருவதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) தெரிவித்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின் படி, சொத்து தொடர்பான ஆவணங்களை பதிவு செய்யும்போது முந்தைய அசல் உரிமைப் பத்திரம் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அசல் ஆவணம் இல்லையெனில் பதிவு செய்ய இயலாது என்ற நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இச்சட்டம் நடைமுறையில் பல பிரச்சனைகளை உருவாக்கும் என FAIRA குறிப்பிடுகிறது. குறிப்பாக, பழைய மற்றும் பூர்வீக சொத்துகளுக்கு அசல் ஆவணங்கள் இல்லாத நிலை, வங்கிக் கடன் அல்லது அடமான காரணங்களால் ஆவணங்கள் பிறரிடம் இருப்பது, சிறிய குறைபாடுகளுக்குக் கூட பதிவு மறுக்கப்படும் அபாயம் போன்றவை பொதுமக்களை பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், அவசர தேவைகளுக்காக சொத்தை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகும் அபாயம், அசல் ஆவணங்களை தவறாக பயன்படுத்தும் சூழல், பதிவு செய்யாத அடமான பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஆகியவையும் இந்தச் சட்டத்தின் எதிர்மறை விளைவுகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திரு. பாண்டி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், பதிவு சட்டத்தின் பிரிவு 34-C-ஐ ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னதாக இதேபோன்ற விதி (Rule 55-A) உயர்நீதிமன்றத்தாலும், பின்னர் உச்சநீதிமன்றத்தாலும் செல்லாதது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பிரிவு 34-C என்பது அதே விதியின் மறுஉருவாக்கம் மட்டுமே என FAIRA வாதிடுகிறது.
புதிய சட்டம் பதிவு அலுவலர்களின் அதிகார வரம்பை மீறுகிறது மற்றும் சொத்து உரிமை பாதுகாப்பிற்கு எதிரானது என்றும் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து தேவையான சட்ட ஆலோசனையை பெற வேண்டும் என FAIRA கேட்டுக்கொண்டுள்ளது.

