12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

Loading

சென்னை, மார்ச் 17-
சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் தொடக்க நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. தமிழகத்திலும் அன்றைய தினம் தடுப்பூசி போடும் பணி தொடங்கி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது.
முதலில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.
இதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி முழு அளவில் மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக 5 கோடியே 33 லட்சத்து 862 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். 4 கோடியே 31 லட்சத்து 914 பேர் 2-ம் தவணை தடுப் பூசி போட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. 28 லட்சத்து 14 ஆயிரத்து 175 மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசியையும், 18 லட்சத்து 67 ஆயிரத்து 576 மாணவர்கள் 2-ம் தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்-சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இதன்படி 12 வயது நிரம்பிய மாணவர்களுக்கும், 14 வயது வரையிலான மாணவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நாடுமுழுவதும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் சிறுவர்-சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை அசோக்நகரில் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் தடுப்பூசி போடும் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் 21 லட்சத்து 21 ஆயிரம் சிறுவர்- சிறுமிகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
12 வயது முழுமையாக நிறைவடைந்த சிறுவர்- சிறுமிகளுக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயது நடைபெற்றுக் கொண்டிருந்தால் தடுப்பூசி போடக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பெரியவர்களுக்கு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், 15 வயதில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது.
இந்த நிலையில் 12 முதல் 14 வயதிலான சிறுவர்-சிறுமிகளுக்கு ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி போடும் பணி தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *