நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்
![]()
ஈரோடு:
ஒரே மாட்டு வண்டியில் வந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தாண்டவமூர்த்தி மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளர் விஜய் ஆகிய இருவரும் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்தனர். முன்னதாக, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இரு வேட்பாளர்களும் வீரப்பன்சத்திரம் பகுதியிலிருந்து ஒரே மாட்டு வண்டியில் ஊர்வலமாகப் பயணித்தனர்.
இந்த ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னமான ஏர்க்கலப்பையை சீமான் வேடமணிந்த விவசாயி ஒருவர் சுமந்து வர, தொண்டர்கள் உற்சாகத்துடன் பின்தொடர்ந்தனர். வீரப்பன்சத்திரத்தில் தொடங்கி பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை சந்திப்பு வழியாக பிரப் சாலை வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அர்பித் ஜெயினிடம் தாண்டவமூர்த்தியும், மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்துஜாவிடம் விஜயும் தங்களது வேட்புமனுக்களை முறைப்படி சமர்ப்பித்தனர். இந்த நூதனப் பிரச்சார ஊர்வலம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

