தெப்ப உற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

Loading

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் மாசி அமாவாசையை முன்னிட்டு தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் :

திருவள்ளூர் பிப் 19 : திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும்.  இக்கோயிலில் அமாவாசை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு  மூன்று நாட்கள் பெருமாள் மற்றும் தாயார் முத்தங்கி சேவை மற்றும் தெப்ப உற்சவம் நடைபெறும்.

அதன்படி  இந்த ஆண்டுக்கான மாசி மாத தெப்ப உற்சவம் கோலாகலமாக  தொடங்கியது.  கோயில் அருகில் ஹிருதாப நாசினி என்ற குளம் உள்ளது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில், மாசி மாத  தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில், உற்சவர், ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளி கோயில் குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.நோய் தீர்க்க வேண்டிக் கொண்டு தெப்பத் திருவிழாவில் பெருமாளை தரிசித்தால் நோய் தீரும் என்பதால்  திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.
மூன்று முறை குளத்தை வலம் வந்த பிறகு திருக்கோயில் ஆலயத்திற்கு வீரராகவர் சென்றார்.  இதற்கான ஏற்பாடுகளை வைத்திய வீரராகவர் திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இந்த மாசி மாத தெப்பத் திருவிழாவில் திருவள்ளூர் மட்டுமல்லாது பெரியகுப்பம்,  ஈக்காடு, காக்களூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வீரராகவரை வழிபட்டு சென்றனர்.
0Shares