சித்தோட்டில் கோவம்ச பண்டாரத்தார் சங்க மாநாடு
![]()
ஈரோடு
ஈரோடு சித்தோட்டில் கோவம்ச பண்டாரத்தார் சங்க மாநில மாநாடு நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கோவம்ச பண்டாரத்தார் முன்னேற்ற நலச்சங்கத்தின் பிரம்மாண்ட மாநில மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த எழுச்சி மாநாட்டில், மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் சமுதாய முன்னேற்றம் மற்றும் உரிமைகளை வலியுறுத்தி பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.குறிப்பாக, திருக்கோவில்களில் பல தலைமுறைகளாகப் பணியாற்றி வரும் பரம்பரை பூசாரிகளை, அந்தந்தக் கோவில் அறங்காவலர் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், முன்னோர்களால் கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை அந்தந்தப் பூசாரிகளின் பெயருக்குப் பட்டா மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்றும், பரம்பரை பூசாரிகளை அப்புறப்படுத்திவிட்டு புதியவர்களை நியமிக்கும் போக்கைக் கைவிட்டு சமூகத்தின் பூஜை உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, ‘உண்டியல்’ என்ற சொல்லிற்குப் பதிலாக ‘பண்டாரம்’ என்ற தூய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் எனவும், ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களில் தங்களை இழிவுபடுத்தும் வகையில் ‘பண்டார பரதேசி’ போன்ற சொற்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகள் தமிழக அரசுக்கு இந்த மாநாட்டின் வாயிலாக முன்வைக்கப்பட்டன.

