பெயிரா தலைவர் ஆ.ஹென்றி தை திருநாள் வாழ்த்து
![]()
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், உலகெங்கிலும் வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தமிழர் திருநாளாம் தை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், தை திருநாள் குறித்த தனது எண்ணங்களை மகிழ்வுடன் பகிர்ந்துள்ளார்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில், இந்த தை திருநாளில். உங்கள் இல்லங்களிலும் – உள்ளங்களிலும் “மங்களம் பொங்கட்டும்”! “மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்”!! கட்டுமானம் களை கட்டட்டும். “மனை வணிகம் சிறக்கட்டும்”!!! தாங்கள் எண்ணியது ஈடேறட்டும்… என உங்கள் அனைவருக்கும் இனிய “பொங்கல் திருநாளாம் – தமிழர் திருநாள்” வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்வதுடன்,
தமிழரின் நாகரிகம், வீரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் பல பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் முதன்மையானதும், சிறப்பு வாய்ந்ததுமாக தை திருநாள் விளங்குகிறது. பொங்கல் திருநாள் சங்க காலத்தில் ‘தை நீராடல்’ என்று அழைக்கப்பட்டது. தை திருநாளாம் பொங்கல் திருநாள் போகி பண்டிகை, தைப்பொங்கல் (சூரிய பொங்கல்), மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாளின் முதல் நாளாம் போகி பண்டிகையை குறித்து பார்ப்போம். போகி பண்டிகை சிறுவர்கள் மேளம் அடித்து மகிழ்வுடன் வீதிகளில் வலம் வர, நம் இல்லங்களில் தேங்கியிருந்த பழைய பொருட்களை எல்லாம் ஒன்று திரட்டி விடியல் காலையில் வீதிகளில் தீயிலிட்டு கொளுத்தி நம் இல்லங்களை தூய்மைப்படுத்தி புதியனவைகளை வரவேற்பது போல, ஒவ்வொரு மனிதனின் உள்ளங்களில் இருக்கும் காமம், குரோதம், வன்மம், பொறாமை, அனைத்தையும் களைந்து, உறவுகளிடம் நட்புகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கிடும் வகையில் நம் உள்ளங்களையும் , எண்ணங்களையும் தூய்மைப்படுத்தி, நல்லதை நினைத்து நல்லதையே செய்வதும், பழையன கழிதலும் புதியன புகுதல் கொள்ளும் நன்னாளாக போகிப் பண்டிகை இனிதே தொடங்குகிறது.
இந்து மத புராணங்களின்படி போகி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணமாக கூறப்படுவது இந்திரனுக்கு மற்றொரு பெயர் போகி என்பதாகும். மதுராவாசிகள் போகி பண்டிகையை ஒவ்வொரு வருடமும் மழை மற்றும் மேகங்களின் கடவுளான இந்திரனின் ஆசிர்வாதம் வேண்டியும், நிலம் செழிப்புறவும், நல்ல மழை பொழியவும் மற்றும் செல்வம் பெருகிட வேண்டியும் இந்திரனை வணங்கி இந்திர விழா எடுத்து கொண்டாடி வந்தனராம். ஒரு முறை கிருஷ்ணர் இந்திர விழா நடத்த வேண்டாம் எனக் கூறியதாகவும், அதற்கு பதிலாக கோவர்தனகிரி விழாவை அவ்வருடம் நடத்தும் படி கூறினாராம். கிருஷ்ணர் கூறியபடி மதுராவாசிகள் இந்திர விழாவினை நடத்தாமல் கோவர்தனகிரி விழாவை நடத்தினார்களாம். இதனால் கோபமுற்ற இந்திரன் மதுராவில் கடும் மழையை பொழிய செய்தாராம். இதனால் அச்சமடைந்த மதுராவாசிகள் கிருஷ்ணரிடம் சென்று தங்களை காப்பாற்றுமாறு வேண்டினார்களாம்.
எனவே கிருஷ்ணர் இந்திரனின் கோபத்தால் ஏற்பட்ட பெருமழையிலிருந்து, மக்களையும், பசுக்களையும் காப்பதற்காக கோவர்த்தன கிரி மலையை தன் சுண்டு விரலால் குடை போல் தூக்கிப் பிடித்து மதுராவாசிகளை காப்பாற்றினாராம். கிருஷ்ணரின் சக்தியை உணர்ந்த இந்திரன் தன் ஆணவம், அகம்பாவம் அனைத்தையும் துறந்து கர்வத்தை களைந்து கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார் எனவும் இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மனிதனும் தன் உள்ளத்தில் உள்ள ஆணவம், அகம்பாவம், கர்வத்தை துறந்து நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்பதனை இந்நிகழ்வு உணர்த்துகிறது. போகி பண்டிகையின் போது மக்கள் அதிகாலை எழுந்து நீராடி புதிய ஆடைகளை அணிந்து, தங்கள் இல்லங்களின் முன்பு விதவிதமான வண்ண கோலங்கள் இட்டு, விளக்குகள் ஏற்றி இறைவனை வழிபட்டு தங்கள் இல்லங்களிலும், உள்ளங்களில் உள்ள எதிர்மறை சக்திகளை அகற்றி, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும் நாளாக இப்பண்டிகை திகழ்கிறது.
சமீபகாலமாக போகி பண்டிகையின் போது பொதுமக்கள் வேண்டாத பொருட்களை தீயிட்டு கொளுத்தும் அதேசமயம் டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர், மின்னணு கழிவுகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய பொருட்களை அதிக அளவில் எரிப்பதன் காரணமாக, வெளியேறும் நச்சுப் புகையினால் (dioxins, carbon monoxide) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல், மேற்கண்ட பொருட்களை எரிப்பதனால் எழும் புகைமண்டலத்தினால் வாகன ஓட்டிகள் விபத்துகளை எதிர்கொள்ள வேண்டிய மோசமான சூழலுக்கு ஆளாகின்றார்கள். மேலும் போகி பண்டிகையின் போது விமான நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர்கள் போன்ற அதிக புகை தரும் பொருட்களைத் தீயிட்டு கொளுத்த வேண்டாம் என விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
எனவே பொதுமக்கள் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபடுதலை கவனத்தில் கொண்டு நெகிழி, மின்னணு கழிவுகள், ரப்பர் மற்றும் டயர் போன்ற பொருட்களை தீயிட்டு கொளுத்துவதை தவிர்க்க வேண்டுமெனவும் பணிவுடன் கேட்டுக் கொள்வதுடன், பொதுமக்கள் மேற்கண்டவைகளை தமது கவனத்தில் கொண்டு இப்போகிப் பண்டிகையினை சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காற்று மாசு ஏற்படாத வண்ணம் நாம் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்வோம் எனவும்,
போகி பண்டிகைக்கு அடுத்த நாள் மக்கள் இல்லங்களில், உள்ளங்களில் புதுப்பொலிவுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் திருநாளாம் தை திருநாளாகும். தை திருநாளானது தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் மற்றும் ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் மாதம் தை மாதம் என்கின்ற வகையிலும், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கொண்டாடப்படும் இப்பண்டிகை பொங்கல் பண்டிகை மற்றும் சூரிய பண்டிகை எனவும் அழைக்கப்படுகின்றது.
பொங்கல் பண்டிகை அன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை அணிந்தும், தங்களின் இல்லங்களின் முன்பு விதவிதமான வண்ணக் கோலங்களிட்டு, புதிய மண் பானையில் பால், அரிசி, மஞ்சள் வெள்ளம், நெய் உள்ளிட்டவற்றைக் கொண்டு சமைக்கும் பொழுது, பொங்கி வரும் பொங்கலை போல் நம் உள்ளங்களிலும் உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்க பொங்கலோ பொங்கல் என்று மங்கள ஒலி எழுப்பி குலவையிட்டு வழிபடுவார்கள். பொங்கல் பண்டிகையின் போது கரும்பு பிரதானமாக விளங்குகிறது.சூரியனுக்கும், மாட்டுக்கும் பொங்கல் படைத்து அண்டை வீட்டாருக்கும், நட்புகளுக்கும் கொடுத்து மகிழும் விழாவே பொங்கல் மற்றும் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது.
மேலும் பொங்கலின் சிறப்பம்சம் ஜாதி, மதம், இனம் என அனைத்தையும் கடந்து நாம் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகர சங்கராந்தி என ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பீகார், மகாராஷ்டிரா, கோவா, ஜம்மு போன்ற மாநிலங்களிலும், புஷ் சங்கராந்தி என மேற்கு வங்கத்திலும், இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளத்தில் மகர சங்கராந்தி எனவும் வங்கதேசத்தில் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது.
தை திருநாளை வரவேற்கும் விதமாக பள்ளி / கல்லூரிகள், அலுவலகங்களில் பணி புரிபவர்கள் பொங்கலுக்கு முன்பாகவே தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் வேட்டி சட்டை அணிந்தும் பெண்கள் தாவணி / புடவை அணிந்தும் ஆடிப்பாடி பொங்கலிட்டு உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
மேலும் நமது பாரம்பரிய கிராமிய கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்மி, கரகாட்டம் போன்ற ஆட்டங்களையும் ஆடி மகிழ்வர். மேலும் பானை உடைத்தல், மாட்டு வண்டி பந்தயம், சேவல் சண்டை, இளவட்டுக் கல்லை தூக்குதல் என பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுவது வழக்கம்.
அறுவடை திருநாளை அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடும் இத்தருணத்தில் விவசாயம் குறித்தும், விவசாயிகளின் தற்போதைய நிலையை குறித்தும் பதிவு செய்வதை என் தலையாய கடமையாக எண்ணுகிறேன். சங்க காலங்களில் மாதம் மும்மாரி பொழிந்து “முப்போகம்” விளைந்தது என நம் முன்னோர்கள் கூற கேட்டிருக்கிறோம். ஆனால் தற்பொழுது நம் நாட்டில் உலகமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டத்தின் பிறகு தொழில்துறையில் பெருமளவில் முன்னேற்றம் கண்டு வருவதினாலும் மற்றும் குறித்த காலங்களில் மழை பெய்யாததினாலும் விவசாயம் சரிவர நடைபெறாமல் உற்பத்தி குறைந்து விவசாயிகள் பெரும் துன்பத்திற்கும், துயரத்துக்கும் ஆளாகியுள்ளனர். இத் தை திருநாள் விவசாய பெருமக்களின் துயர் துடைக்கும் நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதைகள் மற்றும் உரங்களின் காரணமாக விவசாய நிலங்கள் மலடாகி, விளையும் தானியங்கள் விஷமாகி, மனித இனம் தன் வலிமையை இழந்து வரும் சூழல் நிலவுவது வேதனை அளிக்கின்றது. உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் இயற்கை விவசாயம் பொய்த்து, தீமை விளைவிக்கும் செயற்கை விவசாயம் வளர்ந்து வருவது கவலை அளிக்கிறது. இவ்வுலகில் அனைத்து உயிர்களுக்கும் அன்னம் அளித்து பசி தீர்க்கும் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் உறுதுணையாக இருந்து ஆதரவை தெரிவிப்பது நம் அனைவரின் கடமையாகும்.
பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுவது மாட்டுப் பொங்கலாகும். இத்திருநாளில் உழவுக்கும் தொழிலுக்கும் உறுதுணையாக இருந்து மக்களின் வாழ்வுடன் ஒன்றிய கால்நடைகளான பசு, காளை மற்றும் கன்றுகளின் கொம்புகளில் வண்ணம் பூசி, புதிய சலங்கை மற்றும் தாம்பு கயிறு அணிவித்து அழகுர அலங்கரித்து பூஜித்து அவைகளுக்கு நன்றி செலுத்தும் நாளாம் மாட்டு பொங்கல் நன்னாள். இந்நன்னாளில் கன்று குட்டிகளை அலங்கரித்து அவைகளுக்கு பொங்கல் ஊட்டி மகிழ்வார்கள்.
தை திருநாளின் போது முக்கியமாக நிகழ்வாக வீரத்தின் விளை நிலமாம் தமிழ் மண்ணில், தமிழர்களின் வீரத்தின் அடையாளங்களில் ஒன்றான உலக புகழ் பெற்ற ஏறுதழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுவது வழக்கம். தடைகளை உடைத்து, ஆக்ரோஷத்துடன் வாடி வாசல் தாண்டி சீறி பாய்ந்து வரும் காளைகளை, தினவெடுத்த தோள்களும், முறுக்கேறிய புஜங்களும், உள்ளத்தில் உறுதியும், வீரமும் கொண்ட இளைஞர்களின் கூட்டமானது சீறி வரும் காளைகளை இறுக தழுவி அடக்கி வெற்றி காண்பதே ஏறு தழுவுதல் ஆகும். இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்படுகின்றன. மேலும் இந்தப் போட்டியில் அதிக காளைகளை அடக்குபவர்களுக்கு முறையே முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது என சிறப்பு பரிசுகளாக கார், பைக் மற்றும் தங்க நகைகள் என வழங்கப்படுகின்றன. அதுபோல் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஏறு தழுவுதல் போட்டி குறித்து நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்களின் நோக்கமானது கிடைக்க போகும் பரிசுகளுக்காக அல்ல, ஏறு தழுவுதல் வீரர்ககளின் நோக்கம் தமிழர்களின் பாரம்பரியத்தையும் நம் முன்னோர்களை பின்பற்றி தங்களின் வீரத்தையும் இவ்வுலகிற்கு உணர்த்துவதற்காகவும் தான் என்பதனை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டாலும் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய மூன்று இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது மிகவும் பிரபலமானது. குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியானது உலக பிரசித்தி பெற்றது.
தை திருநாளில் நிறைவாக காணும் பொங்கல் மற்றும் கன்னிப் பொங்கல் என்றும் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் நன்னாளில் உறவுகளும் நட்புகளும் குடும்பத்தினருடன் கடற்கரை, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களிலும் ஒன்று கூடி மனம் விட்டு பேசி மகிழ்ந்து, விளையாடி, பலகாரங்களை பகிர்ந்துண்டு அன்றைய பொழுதை மகிழ்வுடன் கழிக்கும் நன்னாளாகும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என நம் முன்னோர்களின் வாக்குப்படி நாம் அனைவரும் தை திருநாளில் கவலைகளை மறந்து, உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க, இனி வாழ்வில் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன், அனைவரும் அனைத்தையும் பெற்று வாழ்வில் உயர்ந்திட இறைவனை வேண்டி வழிபட்டு, ஒன்று கூடி கொண்டாடி மகிழ்வோம் என பெயிரா தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி தனது தை திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

