இயற்கை வேளாண் கண்காட்சி; வானதி சீனிவாசன்
![]()
ஈரோட்டில் பாஜக விவசாய அணி சார்பில் இயற்கை வேளாண் கண்காட்சி: வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்
ஈரோடு, ஜன. 05:
மஞ்சள் மாநகரமான ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் நடத்தப்படும் விவசாயிகள் விழிப்புணர்வு மாநாட்டை முன்னிட்டு, மாபெரும் இயற்கை வேளாண் கண்காட்சி இன்று கோலாகலமாகத் தொடங்கியது. ஈரோடு – திண்டல், வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள லட்சுமி துரைசாமி திருமண மஹால் திடல் எதிரில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முழுவதும் விவசாயிகளே நேரடியாகப் பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில் இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் நவீன வேளாண் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நடைபெற்ற தொடக்க விழாவில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குத்துவிளக்கேற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட தலைவர்கள், இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்தும் விவசாயிகளின் நேரடி விற்பனை வாய்ப்புகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.எம்.செந்தில், விவசாய அணி மாநில செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் கணேசன், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரிவு மாநில செயலாளர் கிருத்திகா சிவகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விவசாய மைய வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சி என்ற கொள்கையை முன்வைத்து, இயற்கை வேளாண்மைக்கு ஊக்கமளிக்கவும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

