மறைந்த ஈவெராவின் 3-ம் ஆண்டு நினைவு தினஅஞ்சலி
![]()
ஈரோடு
மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவின் 3-ம் ஆண்டு நினைவு தினம்: காங்கிரஸ் கட்சியினர் உணர்ச்சிப்பூர்வ அஞ்சலி
ஈரோடு கிழக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெராவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உணர்ச்சிப்பூர்வ நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பாக திருமகன் ஈவெராவின் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் மற்றும் மறைந்த திருமகன் ஈவெராவின் மகள் சமண்ணா ஆகியோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரனும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா தொகுதி மக்களிடம் காட்டிய அன்பு மற்றும் அவரது அரசியல் பணிகளை நினைவு கூர்ந்து இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வரிசையாக நின்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இளவயதிலேயே மறைந்த திருமகன் ஈவெராவின் நினைவைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வு காங்கிரஸாரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

