நேற்றுஇரவுபெய்தகனமழையில்டிடிகே சாலைபாதிப்பு
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டத்தில், நேற்று இரவு பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட நகராட்சிக்குட்பட்ட டிடிகே சாலை, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீர., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம்
தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்தில் நேற்றைய தினம் பெய்த கனமழை காரணமாக சில இடங்களில் மண்சரிவு மற்றும் தடுப்புசுவர் சேதமடைந்துள்ளதை நேரில் பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நகராட்சி, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து உடனடியாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டு சில இடங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மேலும், இந்த மழையினால் இதுவரை எவ்வித பொருட்சேதமோ, பொதுமக்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை. குன்னூர், உலிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரிரு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்று நீலகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலார்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட சில சாலைகளில் போக்குவரத்து மாற்றப்படுகிறது. அந்த இடங்களில் பழுது பார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
மேலும் மழையினால் பாதிக்கப்படக்கூடியதாக எண்ணக்கூடிய இடத்தில் வசிக்கும் மக்களை உறவினர் வீட்டிலோ அல்லது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலோ தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மேற்கொள்ளப்பட்டுள்ளது. அலுவலர்களும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இவ் ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா ., குன்னூர் நகராட்சி ஆணையாளர் .இளம்பருதி, குன்னூர் வட்டாட்சியர் ஜவகர், குன்னூர் நகர்மன்ற துணைத்தலைவர் வாசிம் ராஜா உட்பட பலர் உடன் உள்ளனர்.

