கோட்டைஆருத்ரா கபாலீஸ்வரர்கோவில் ஆருத்ரா விழா

Loading

ஈரோடு
ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஈரோடு கோட்டை பகுதியில் அமைந்துள்ள மிகப்பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்) கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசன விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த மாதம் 16-ம் தேதி சிறப்பு வழிபாடுகளுடன் தொடங்கியது. அன்று மாலையில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலையில் தொடங்கியது. இதையொட்டி நடராஜப் பெருமானுக்கு பால், சந்தனம், குங்குமம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு நறுமணத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பின்னர் மேளதாளங்கள் முழங்க நடராஜர் மற்றும் சிவகாமியம்மன் வீதி உலா நடைபெற்றது. ஈஸ்வரன் கோவில் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம் மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, காமராஜர் வீதி வழியாகச் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழியெங்கும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழாவின் நிறைவாக மாலையில் நடராஜரின் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆருத்ரா தரிசன விழாவில் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “தென்னாடுடைய சிவனே போற்றி” என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
0Shares