திருவள்ளூரில் விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம்
![]()
திருவள்ளூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் :
திருவள்ளூர் ஜன 02 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர சாகுபடியினை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் முக்கிய இனமான பசுந்தாள் உர உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண் வளம் காக்கும் வகையில் ஆயக்கட்டு. இறவைப் பாசன பகுதிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் 7500 ஏக்கரில் ரூ.93.73 லட்சம் மானியத்தில் பசுந்தாள் உர பயிர் பயிரிட திட்டமிடப்பட்டு விவசாயிகளுக்கு தற்போது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள் ஒரு கிலோ முழு விலையாக ரூ.129.4 இதில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.62.50 வழங்கப்பட்டு வருகிறது.
நகர்ப்புறங்களிலும் கிராமபுரங்களிலும் வசிக்கும் மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொய்யா, எலுமிச்சை, பப்பாளி போன்ற 3 வகையான பழச்செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு ரூ.100 மதிப்பிலான 100 சதவீதம் மானியத்தில் வழங்க 32900 எண்கள் இலக்கு பெறப்பட்டுள்ளது. 32900 எண்கள் பழச்செடி தொகுப்பு வழங்கப்பட்டு 32900 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் இ-வாடகை திட்டத்தின் கீழ் மணிக்கு ரூ.500 என்ற வீதத்தில் டிராக்டர் உழவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2025-26 நிதியாண்டில் இதுவரை 849 விவசாயிகள் 10111 மணி நேரம் டிராக்டர் முன் பதிவு செய்து பயனடைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம், திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திட்டத்தில் வேளாண் விளைபொருட்களுக்கான மறைமுக ஏலம் மூலம் நல்ல விலை கிடைக்க வழிவகை செய்கிறது. இடைத்தரகர் இன்றி விற்பனை செய்யப்பட்டு பணம் நேரடியாக வங்கி கணக்கு வரவு வைக்கப்படுகிறது. மேலும், விவசாயிகள் தங்கள் இருப்பிடத்திலேயே விளைபொருட்களை விற்பனை செய்ய பண்ணை வாயில் வர்த்தக வசதி உள்ளது. எனவே, இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கூறினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் 20 விவசாயிகளுக்கு ரூ.28,81,751 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ்,இணை இயக்குநர் (வேளாண்மை) க.செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.வேதவல்லி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் குமரவேல், கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குநர் ப.ஜெயந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

