புட்லூர் அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்து அம்மன் திருக்கோயில் திருக்குளத்தில் கழிவு நீர் கலந்து பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் :
திருவள்ளூர் ஜன 01 : திருவள்ளூர் அடுத்த புட்லூரில் உள்ளது அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்து அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் அம்மனை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் கோயிலில் புனித நீராடி விட்டு ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். ஒன்பது வாரம் பிரார்த்தனை செய்தால் வேண்டிய வரம் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்நிலையில் தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்த இந்த ஆலயம் கடந்த 2007 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு சென்றது.
திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குழந்தை வரம் வேண்டி இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வசதிக்காக புனித நீராடுவதற்காக அப்பகுதியில் ஏற்படுத்திய திருக்குளத்தில் குளித்துவிட்டு, அங்கேயே சிறுநீர் கழிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கோவில் குளத்திலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனை இந்து சமய அறநிலையத்துறை முறையாக பராமரிக்கப்படாததால் கழிவுநீர் கலந்து பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகம் கண்டு கொள்ளாததால் பக்தர்கள் கோவில் பின்புறம் குழாயில் தண்ணீர் பிடித்து தலையில் ஊற்றிக் கொண்டு விரதத்தை நிறைவேற்றி வருகின்றனர்.அதே போல் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட இலவச கழிப்பிடத்தையும் பராமரிக்காததால் துர்நாற்றம் வீசுவதோடு உள்ளே செல்லவும் அச்சப்படுகின்றனர். மேலும் கோவில் குளம் அருகே பன்றிகளும் அதிக அளவில் சுற்றி திரிவதால் நோய் தொற்று பரவும் அபாயமும் இருப்பதாகவும், இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுடுகாட்டு பாதையில் தேங்கி இருப்பதால் உடலை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் அதனை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாசி படர்ந்து காணப்படும் திருக்குளத்தை சீரமைத்தும், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும் பக்தர்களின் வசதிக்காக உடனடியாக குளத்தை சீர் செய்தும், கழிவறையை சுத்தம் செய்தும், சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.