டிடி தமிழ்அலைவரிசை,தரைவழி 24மணி நேரமும்
![]()
தமிழ்நாட்டில் டிடி தமிழ், ஆகாஷ்வாணி நிகழ்ச்சிகளை பிரபலப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் – தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் விளக்கம்
PIB Chennai
டிடி தமிழ் அலைவரிசை புதுப்பொலிவுடன் 2024 ஜனவரி 19 அன்று தொடங்கப்பட்டது. இது செயற்கைக்கோள் ஒளிபரப்பு, தரைவழி ஒளிபரப்புக் கட்டமைப்பு ஆகியவற்றின் மூலமாக 24 மணி நேரமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் அலைவரிசையாகும்.
டிடி தமிழ் தொலைக்காட்சியானது, தமிழர்களின் கலை, கலாச்சாரம், இலக்கியம், வரலாறு, பாரம்பரியம், மரபுகள் போன்றவை தொடர்பான நிகழ்ச்சிகளையும், மக்களை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறது. இது தமிழ்நாடு தொடர்பான செய்திகளையும் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி வருகிறது.
டிடி தமிழ் அலைவரிசை எச்டி தொழில்நுட்பத்திலும் ஒளிபரப்பாகிறது. டிடி தமிழ், டிடி தமிழ் எச்டி ஆகியவை பிரசார் பாரதியின் இலவச டிடிஎச் தளமான டிடி ஃப்ரீ டிஷ்-ல் ஒளிபரப்பப்படுகின்றன.
பிராந்திய தொடர்புகளை மேலும் வலுப்படுத்த, டிடி ஃப்ரீ டிஷ் ஏலக் கொள்கை மறு சீரமைக்கப்பட்டுள்ளது. இது பிராந்திய அலைவரிசைகளை ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக, 2025 ஏப்ரல் 1 முதல் தமிழ் உட்பட 28 பிராந்திய மொழி சேனல்கள் டிடி ஃப்ரீ டிஷ்-ல் இணைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு தமிழ்நாட்டில் 17 ஆகாஷ்வாணி வானொலி அலைவரிசைகளை நிறுவியுள்ளது. இது தவிர, உள்ளூர் வானொலி சேவைகளை விரிவுபடுத்துவதற்காக வேலூரில் 5 கிலோவாட், ஏற்காட்டில் 5 கிலோவாட், கும்பகோணத்தில் 10 கிலோவாட் திறன் கொண்ட 3 பண்பலை அஞ்சல் நிலையங்களை நிறுவவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆகாஷ்வாணி நிலையங்களின் நிகழ்ச்சிகள் “நியூஸ்ஆன்ஏர்” என்ற மொபைல் செயலி மூலமாக நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
பிரசார் பாரதியின் ஓடிடி தளமான “வேவ்ஸ்”, செய்திகள், நடப்பு நிகழ்வுகள், கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தமிழ் மொழி உள்ளடக்கங்களை வழங்குகிறது.
தமிழ்நாட்டின் உள்ளூர் செய்திகள் டிடி செய்திகளின் பிராந்திய செய்திப் பிரிவால் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ஆகாஷ்வாணி நிலையங்களும் பிராந்திய செய்திகளை ஒலிபரப்புகின்றன.
தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கியமான கலாச்சார, தேசிய நிகழ்வுகள் டிடி தமிழ், ஆகாஷ்வாணி அலைவரிசைகளால் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.
தமிழ்நாட்டின் முன்னணி செய்தித்தாள்கள் மூலமும் மெட்ரோ ரயில்களில் விளம்பரங்கள் மூலமும் டிடி தமிழ் நிகழ்ச்சிகள் தொடர்பான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் நிகழ்ச்சிகள் டிஜிட்டல் தளங்களிலும் பகிரப்பட்டு மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆகாஷ்வாணி நிலையங்களும் அவற்றின் சமூக ஊடக தளங்கள் மூலம் தமிழ் நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்துகின்றன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று (05.12.2025) எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

