ஸ்ரீசுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
![]()
ஸ்ரீனிவாசா ரெசிடென்சி பேஸ் 3 ஸ்ரீசுந்தர விநாயகர் கோவில்
கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
108 வகையான மூலிகைகளைக் கொண்டு வேள்வி பூஜை
கோவை பன்னீர்மடை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீனிவாசா ரெசிடென்சி பேஸ் 3 பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை பன்னீர்மடை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீனிவாசா ரெசிடென்சி பேஸ் 3 பகுதியில் 40 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இங்குள்ள ரிசர்வ் சைட் பகுதியில் புதிதாக ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் விநாயகர் சிலை பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஸ்ரீனிவாசா ரெசிடென்சி பேஸ் 3 பகுதியில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்தும் முளைப்பாரி எடுத்து வந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் வைத்தனர்.
தொடர்ந்து 108 வகையான மூலிகைகளைக் கொண்டு முதற்கால வேள்வி பூஜை, இரண்டாம் கால வேள்வி பூஜைகள், கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. யாகங்கள் மற்றும் கும்பாபிஷேகத்தை குருமூர்த்தி குருக்கள் மற்றும் சுவாமிநாத குருக்கள் ஆகியோர் நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து கும்பங்களில் எடுத்துவரப்பட்ட புனித நீர் நகரைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஸ்ரீ சுந்தர விநாயகர் சிலை மீது ஊற்றி கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து புனித நீரை பக்தர்கள் மீது தெளித்து ஆசி வழங்கினர். அதைத்தொடர்ந்து விநாயகருக்கு அபிஷேக பூஜைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீனிவாசா ரெசிடென்சி பேஸ் 3 பகுதி குடியிருப்போர் செய்திருந்தனர்.

