P.மூர்த்தி அமைச்சருக்கு ஏக்கருக்கு இரண்டு லட்சமா?
![]()
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் ஆ.ஹென்றி தமிழகத்தில் பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் அதிகார துஷ்பிரயோகம், லஞ்ச லாவண்யம் போன்ற படுபாதக செயல்களினால் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்கொள்ளும் இன்னல்கள், வேதனைகள் குறித்து பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்…
எமது பெயிரா கூட்டமைப்பின் ஏழாவது குழுவின் புதுச்சேரி மாநில தலைவராக திரு.அன்பரசு என்கிற அன்பு பொறுப்பு வகிக்கின்றார். அவருக்கு சொந்தமான நிலம் திண்டுக்கல் வருவாய் மாவட்டம், திண்டுக்கல் பதிவு மாவட்டம், நிலக்கோட்டை வட்டம் வத்தலகுண்டு சார் பதிவாளர் அலுவலகம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம், பழைய வத்தலகுண்டு ஊராட்சி மற்றும் கிராமம், சர்வே எண்கள். 963/3A, 3B&3C, 964/1,2,3,4,5,6,7, &8, 1206/4A, 4B & 4C ஆகிய புல எண்களில் அடங்கிய 39416.05 சதுர மீட்டர் / ஏக்கர் 9.74 சென்ட் விஸ்தீரணம் கொண்ட நிலத்தினை கடந்த 2010 ஆம் ஆண்டு அனுமதியற்ற முறையில் (பஞ்சாயத்து அனுமதி பெற்று) மனை பிரிவாக அமைத்து அபிவிருத்தி செய்து, 270 மனைகளை அமைத்து அதில் 33 மனைகளை விற்பனை செய்து உள்ளார். மேற்படி விற்பனை செய்யப்பட்ட மனைகளை மீண்டும் மறு கிரையமும் செய்துள்ளனர். கடந்த 09.09.2016 அன்று ஏற்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு பிறகு, தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சிறப்பு திட்டமான மனை வரன்முறை சட்டத்தின் கீழ் கொள்கை அளவிலான ஒப்புதல் வேண்டி திண்டுக்கல் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து, திண்டுக்கல் நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அவர்களின் DTCP அனுமதி எண் ம.வ.வ.(மு) மா. ந. ஊ. அ (திண்டுக்கல்) எண் 76/2024 ஆக வரன்முறைப்படுத்தி அனுமதி பெற்றுள்ளார். தற்பொழுது பதிவுத்துறை இணையதளத்தில் மேற்கண்ட மனை பிரிவிற்கு மனை மதிப்பு சதுர அடி ரூபாய் 50 என நிர்ணயம் செய்தும், தற்பொழுது சதுரடிக்கு ரூபாய்.60 என உயர்த்தியும் பதிவு துறையின் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட மனை பிரிவில் எமது FAIRA கூட்டமைப்பின் புதுவை மாநில தலைவர் திரு.அன்பரசு அவர்கள் முறையாக பூங்காவிற்கு இட ஒதுக்கீடு செய்தும் 30 சதவீதத்துக்கும் மேல் கடந்த 2016-க்கு முன்பாகவே மிகவும் சிரமப்பட்டு விற்பனை செய்துள்ளார்.தற்போது மேற்கண்ட மனை பிரிவுக்கு மனை மதிப்பு நிர்ணயம் செய்த உத்தரவு நகல் பதிவு அலுவலகத்தில் இல்லை எனவும், ஆகவே மேற்படி மனை பிரிவிற்கு புதியதாக மீண்டும் மனை மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டுமெனவும், அதற்கு சம்பந்தப்பட்ட பதிவு துறையின் அமைச்சர் திரு.P.மூர்த்தி அவர்களின் அலுவலகத்தை அணுகி கட்சி நிதியாக ஏக்கருக்கு இரண்டு லட்சம் தர வேண்டுமெனவும் திண்டுக்கல் மாவட்ட உதவி பதிவுத்துறை தலைவர் திரு.மகேஷ் அவர்கள் வலியுறுத்துவதாகவும், நிதி கொடுத்தால் மட்டுமே மேற்கண்ட மனை பிரிவில் மீதம் உள்ள மனைகளுக்கு ஆவணங்களை பதிவுத்துறையின் இணையதளத்தில் உள்ள சதுரடி ரூபாய் 60 என்கிற மதிப்புக்கு பதிவு செய்ய இயலும் என மென்மையான முறையில் அச்சுறுத்துவதாகவும் இல்லையெனில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கூடுதலாக புதிய மதிப்பு நிர்ணயம் செய்வேன் என தெரிவிப்பதாகவும், மேலும் மனைகளுக்கான மதிப்பு பதிவுத்துறை இணையதளத்தில் சதுர அடிக்கு ரூபாய் 60 என நிர்ணயிக்கப்பட்டும் மேற்கண்ட வீட்டுமனை பிரிவில் உள்ள மனைகளை பதிவு செய்ய பதிவு அலுவலர்கள் மறுப்பதாகவும் இதனால் தற்பொழுது எந்தவிதமான ஆவணங்களையும் பதிவு செய்ய இயலவில்லை எனவும் எங்களிடம் மனக்குமுறலுடன் முறையிட்டுள்ளார்.
மேலும் மேற்கண்ட பதிவு அலுவலர்களின் செயல்களால் எங்கள் கூட்டமைப்பின் புதுவை மாநில தலைவர் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், அலைச்சலுக்கு மிகுந்த, வேதனைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளார். இதனால் அவரின் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு முடக்கப்பட்டுள்ளது அவரிடம் மனைகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளரும் மனைகளை பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் ரியல் எஸ்டேட் துறையில் பல வருடங்களாக வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் நம்பிக்கையும் நற்பெயரையும் சம்பாதித்து வைத்துள்ள திரு.அன்பரசு அவர்களுக்கும் மற்றும் அவரது நிறுவனத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதுடன், இதன் மூலம் பதிவுத்துறைக்கு வரவேண்டிய வருவாயும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே மேற்கண்ட பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி எமது கூட்டமைப்பின் உதவியை திரு.அன்பரசு மற்றும் பங்குதாரர்கள் நாடியுள்ளனர். பெயிரா கூட்டமைப்பின் சார்பில் மேற்கண்ட பிரச்சனையை பெருமதிப்பிற்குரிய பதிவுத்துறை தலைவர் ஆகிய தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இது குறித்து திண்டுக்கல் உதவி பதிவுத்துறை தலைவர் திரு.மகேஷ் அவர்களை கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். ஆனால் திரு.மகேஷ் அவர்களின் அணுகுமுறை பதிவுத்துறை அமைச்சர் திரு.P.மூர்த்தி அவர்களின் சொல்லுக்கும், செயலுக்கும் கட்டுப்பட்டு நடப்பது போல் இருந்தது.
ஆகவே பெருமதிப்பிற்குரிய பதிவுத்துறை தலைவர் அவர்கள் மேற்கண்ட எமது கூட்டமைப்பின் புதுவை மாநில தலைவர் திரு.அன்பரசு அவர்களின் நியாயமான கோரிக்கையை தாங்கள் கனிவுடன் பரிசீலித்து, தகுந்த தீர்வினை விரைந்து ஏற்படுத்தி தர வேண்டுமெனவும் மற்றும் இதுபோல் பதிவுதுறையால் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும் தீர்வு கிடைத்திட பதிவுத்துறை தலைவர் அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுத்திட வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பெயிரா கூட்டமைப்பின் சார்பாக கோரிக்கை வைத்து ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

