சொந்த வீட்டில் நீங்கள் மகிழ்ச்சியாக, தூங்கலாம்.

Loading

சுந்தரசோழபுரத்தில் 1,12,294 பயனாளிகளுக்கு ரூ.1000.34 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் : நான்கரை வருடத்தில் 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அரசு வழங்கி இருக்கிறது : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் :

திருவள்ளூர் நவ 25 : திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில்  ரூ.137.38 கோடி மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு ரூ.1000.34 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மட்டும் சுமார் 37 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை கொடுக்க இருக்கின்றோம். இது மிகப் பெரிய ஒரு சாதனை, மகிழ்ச்சியான தருணம். இப்படி இந்த நான்கரை வருடத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை நம்முடைய அரசு வழங்கி இருக்கின்றது. இது மிகப் பெரிய ஒரு சாதனை.பட்டா என்பது இந்த அரசு உங்களுக்கு தருகின்ற ஒரு சலுகை கிடையாது. அது உங்களுடைய உரிமை. உங்களுடைய சொந்த இடத்தில்,  சொந்த வீட்டில் நீங்கள் மகிழ்ச்சியாக, நிம்மதியாக தூங்கலாம்.

வீடற்ற மக்களுக்கு வீடு கொடுக்க வேண்டும் என்பதுதான், கலைஞர் கொண்டுவந்த திட்டம், குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுகின்ற அந்த திட்டம். அப்படிப்பட்ட நம்முடைய கலைஞர் பெயரிலேயே, இந்தத் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கான ஆணைகளை இன்றைக்கு சுமார் 4 ஆயிரம் பயனாளிகளுக்கு கொடுக்க இருக்கின்றோம்.

விளையாட்டுத்துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி, பூந்தமல்லி, மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் மதிப்பிலான Mini Stadium அமைக்க அடிக்கல் நாட்டி இருக்கின்றோம். இந்த மினி ஸ்டேடியங்கள் விரைவில் கட்டிமுடிக்கப்படும். அதை இந்த மாவட்ட விளையாட்டு வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இது தவிர, இன்றைக்கு இங்கே 50 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழு சகோதரிகளுக்கு  அடையாள அட்டையும் கொடுக்க இருக்கின்றோம்.  மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த அத்தனை சகோதரிகளுக்கும், அவர்கள் புகைப்படத்துடன் சேர்ந்து அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அடையாள அட்டை மூலமாக அவர்களுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கும்.

அதுமட்டுமல்ல, வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிச்சயம் வந்து சேரும்.இப்படி பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் என்று அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் ச.சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆ.கிருஷ்ணசாமி,எஸ்.சுதர்சனம், வி.ஜி.இராஜேந்திரன்,எஸ்.சந்திரன், டி.ஜே.கோவிந்தராஜன்,க.கணபதி, துரை சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா,மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், சார் ஆட்சியர் ரவிக்குமார்,திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஜெயக்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0Shares