படிவங்களைதிரும்ப பெற்று கணினி மயமாக்கல்
![]()
ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெற்று கணினி மயமாக்கல் தொடர்பான பணிகள் : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் நவ 21 : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துக்கோட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை விநியோகித்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெற்று கணினி மயமாக்கல் தொடர்பான பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறித்தினார்.
அதனைத்தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி வட்டம் சிப்காட் தொழிற்பூங்கா எதிரில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மற்றும் தாமரைகுளம் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிக்கால்வாய்களில் கழிவுநீர் கலந்து தாமரைகுளம் மாசுப்படுவது தடுப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.அப்பொழுது ஆட்சி யர் கூறியதாவது :
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் தாமரை ஏரி உள்ளது. சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பிற கழிவுகள் சேர்ந்து ஏரி அசுத்தம் செய்து மாசு ஏற்படுகிறது.இதனால் மக்களுக்கு தேவையில்லாத நோய்கள் தேவையில்லாத பிரச்சனைகள் வருகிறது என்பதால் ஆய்வு நடத்தி இதற்கு தீர்வை காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி ஆரணியாறு கோட்ட செயற்பொறியாளர் (நீர்வளத்துறை), மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினுடைய சுற்றுச்சூழல் பொறியாளர், சிப்காட் திட்ட அலுவலர்கள் அனைவரும் சேர்ந்து ஆய்வு செய்து எங்கெல்லாம் இடர்பாடுகள் உள்ளன என்று அறிக்கையை வழங்கியிருக்கிறார்கள்.
ஆய்வுக்கு மாதிரிகள் அனுப்பபட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுப்பதற்கான பணிகளையும் மேற்கொண்டு இருக்கிறார்கள். சிப்காட்டில் இருந்து வர மழைநீர் வெளியேற்று கால்வாய் மற்றொன்று தாமரை ஏரி நீர் வழி பகுதி. அங்கு இரவு நேரங்களில் அதிகமான டேங்கர் லாரிகள் தகவல் யாருக்கும் சொல்லாமல் ஏரியில் கழிவுநீர்கள் வெளியேற்றப்படுகிறது. தற்போது கடுமையான நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறித்தி உள்ளோம்.இரவு நேரங்களில் யாராவது வந்தால் அடையாளம் காண்பதற்காக அந்த பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏரியில் ஆய்வு செய்யும் போது ஆகாயத்தாமரை மற்றும் வேதிப்பொருட்கள் இருக்கிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள். அதை ஒரு தற்காலிக நடவடிக்கையாக தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நீர்வளத்துறை மற்றும் பேரூராட்சிகள் துறை சார்பில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.இதில் வாக்காளர் பதிவு அலுவலரும் தனித்துணை ஆட்சியருமான (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலமுருகன், உதவி வாக்காளர் பதிவு அலுவலரும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியருமான ராஜேஷ், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்,கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், ரஜினிகாந்த், ஆரணியாறு வடிநிலகோட்ட செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஜெயக்குமார், கும்மிடிப்பூண்டி மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் கஜலட்சுமி, சிப்காட் தொழிற்பூங்கா திட்ட அலுவலர் சரவணன், கும்மிடிபூண்டி வட்டாட்சியர் சுரேஷ்குமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

