நீலகிரியில் கடைகளின் கட்டுமானபணி ஆய்வு
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிகுட்பட்ட மார்கெட் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.20 கோடி மதிப்பில் பகுதி 1-யில் நடைபெற்று வரும் கடைகளின் கட்டுமான பணிகளை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி, நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு சொந்தமான ஆங்கிலேயர் காலத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகவும் பழமையான தினசரி சந்தை வளாக கட்டடத்தினை புதியதாக தரைதளத்தில் 126 கார்கள் மற்றும் 163 இருசக்கர வாகனம் நிறுத்தம் செய்யும் வகையிலும், மார்கெட் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த தினசரி மார்கெட் அங்காடி பணிகளுக்கான புதிய கட்டுமானப்பணிகள் இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு சுமார் 689 கடைகள் கட்டுவதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன. பகுதி ஒன்றில் ரூ.20 கோடி மதிப்பில் 239 கடைகளும், பகுதி இரண்டில் ரூ.39.78 கோடி மதிப்பில் ஏறத்தாழ 450 கடைகள் என மொத்தம் 689 கடைகள் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.59.78 கோடி மதிப்பில் நடைபெற உள்ளது. இதில் பகுதி 1யில் நடைபெற்று வரும் கடைகளின் கட்டுமான பணிகளை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவுப்படுத்திட நகராட்சி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், உதகை நகராட்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.17 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அம்பேத்கார் பூங்கா (அறிவியல் பூங்கா) அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ் ஆய்வின் போது, உதகை நகராட்சி ஆணையாளர் கணேசன், உதகை நகர்மன்ற தலைவர் திருமதி வாணீஸ்வரி, உதகை நகர்மன்ற துணை தலைவர் ரவிக்குமார், திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

