14-ஆவது ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைபோட்டி
![]()
தேனி மாவட்டம்
14 – ஆவது ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட வினையாட்டு மைதானத்தில், (16.11.2025)அன்று 14-ஆவது ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்கள், தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன் அவர்கள் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சரவணக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டி, தமிழ்நாட்டில், சென்னை மற்றும் மதுரையில் 28.11.2025 முதல் 10.12.2025 நடைபெற உள்ளதை முன்னிட்டு, உலகக்கோப்பைப் போட்டிக்கான வெற்றிகோப்பையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் 05.11.2025 அன்று அறிமுகப்படுத்தினார்.
இந்த உலக கோப்பை போட்டியானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இப்போட்டியில் முதல் முறையாக 24 நாடுகளின் அணிகள் பங்கேற்கவுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சென்னையில் 10.11.2025 அன்று உலகக் கோப்பை போட்டியின் சின்னமாக காங்கேயனை அறிமுகப்படுத்தி, வெற்றிக்கோப்பை சுற்றுப்பயணத்தை துவக்கி வைத்தார்கள். வெற்றிக் கோப்பையானது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இன்று (16.11.2025) தேனி மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஹாக்கி வீரர்கள், விளையாட்டு விடுதி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் வரவேற்பு நடனம், சிலம்பம் மற்றும் கலைநிகழ்ச்சிகள், நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள புதிய உள்விளையாட்டு அரங்கில் வெற்றி கோப்பை காட்சிப்படுத்தப்பப்பட்டது. பின்னர், விளையாட்டு மைதானத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை பொதுமக்கள் பார்வைக்காக வெற்றி கோப்பையானது ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு வழி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ராஜகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி அபிதா ஹனீப், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.சிவக்குமார், ஹாக்கி விளையாட்டு கழக மாவட்ட செயலாளர் திரு.சங்கிலி காளை, தேனி-அல்லிநகரம் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.செல்வம், மற்றும் பயிற்றுநர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

