அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு

Loading

ஈரோடு மாவட்டம்

மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்

திரு.சு.முத்துசாமி அவர்கள் தலைமையில்

மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

                ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் தலைமையில்  (03.11.2025) அன்றுமாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,

                மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார்கள். சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியல் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பயிற்சி மையம், விளையாட்டரங்கம், மிகப்பெரிய நூலகம் ஆகியவை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். கல்வித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமையும் பொழுது சுமார் 18,600 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வாய்ப்பு உள்ளது. மேலும் தோனிமடுவு திட்டம், காவரி ஆற்றின் உபரிநீரை மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியிலிருந்து பவானி மற்றம் அந்தியூர் வட்டங்கள் பயன்பெறும் வகையில் உந்துதல் மூலம் நீர் நிரப்பும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் அமைக்கப்பட உள்ளது.

தற்போது, ஈரோடு மாவட்டத்தில் முடிவுறும் நிலையில் உள்ள சோலார் பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பணிகளை விரைவாக முடித்திட வேண்டும், மேலும் புதிதாக அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்படவுள்ள கட்டிடப்பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் ஆகிய திட்டங்களை முழுமையாக கணக்கெடுத்து அந்த பணிகளை துவக்குவதற்கும், சத்தி சாலை பேருந்து நிலையம் அமைக்கும் பணியினையும், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக, மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், பணி காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் 17 நபர்களுக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜி.வெங்கடாசலம், மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் திரு.வே.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.சாந்த குமார், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் திரு.சிவானந்தம் இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர் (ஈரோடு) திரு.குமிலி வெங்கட அப்பால நாயுடு இ.வ.ப., கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.முகம்மது குதுரத்துல்லா (பொது), ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சிந்துஜா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு – செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம்.

0Shares