கோவையில் இந்தோ-ஏஐடி கூட்டு மாநாடு

Loading

கோவையில் இந்தோ-ஏஐடி கூட்டு மாநாடு, முதுகலை கல்வி வாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு
ஆசிய தொழில்நுட்ப நிறுவனம், எவர்கிரீன் கல்வி குழுமம் ஆகிய கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ‘இந்தோ-ஏஐடி கூட்டு மாநாடு 2025’ கோவை, பந்தயசாலையில் உள்ள தனியார் உணவகத்தில், ஹோட்டல் நடைபெறவுள்ளது.
இதில் முதன்மை விருந்தினராக தாட்கோ வின் நிர்வாக இயக்குநர் ஸ்வேதா சுமன் பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை உப்பிலி பாளையத்தில் நடைபெற்றது அப்பொழுது ஏஐடி கல்வி நிறுவனத்தின் நானோ தொழில்நுட்பத்துறையின் இயக்குனர் பிரானேஷ், காலநிலை மாற்றத்துறை தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெய் கோவிந் சிங், எவர்கிரீன் கல்வி குழுமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் தர்மலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.
இந்தோ-ஏஐடி கூட்டு மாநாடு 2025’, தாய்லாந்து நாட்டில் இயங்கி வரும் உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வழங்கப்படும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மேற்படிப்புகளுக்கான வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்கும் வகையில் நடத்தப்பட உள்ளது. நம் தமிழ்நாட்டு மாணவர்களின் நலன்களுக்காக  தமிழ்நாடு மாநில அரசுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கின் நகருக்கு அருகே அமைந்துள்ள சர்வதேச முதுகலை கல்வி நிறுவனமாகும். இங்கு பொறியியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், நிலையான வளர்ச்சி, மேலாண்மை ஆகிய துறைகளில் முதுகலை, முனைவர் பட்டப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி மேற்படிப்புகள் ஆகியன வழங்கப்படுகின்றன. இது முழுக்க முழுக்க இலாப நோக்கமற்ற கல்வி நிறுவனமாக செயல்படுகின்றது, கல்வி உதவித் தொகையின் மூலமே மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படுகிறது. இந்நிறுவனத்திற்கு பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றதாகவும்,
இக்கல்வி நிறுவனத்தில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 25-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உலகத் தர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இக்கல்வி நிறுவனத்தில் அந்தந்த துறைசார் படிப்புகளை, தொழிற்கல்வி மற்றும் களப் பயிற்சிகள் மூலமே கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டுக்கு தோராயமாக 6,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதிலிருந்து வெறும் 600 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுப்பட்டு சேர்க்கப்படுகின்றனர். மேலும் இக்கல்வி நிறுவனம் இந்தியாவின் ஐ.ஐ.டி போன்ற உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களோடு இணைந்து இரட்டை பட்டய கல்வி வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் வட மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் இக்கல்வி நிறுவனத்தில், கணிசமான அளவில் மாணவர்கள் கல்வி பெற சேர்கிறார்கள். ஆனால் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து பெரிய அளவில் மாணவர்களின் சேர்க்கை நடைபெறுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் இக்கல்வி நிறுவனம் மற்றும் அங்கு வழங்கப்படும் கல்வியியல் வாய்ப்புகள் குறித்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெரிவதில்லை. ஆகையால் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் பல்துறை பேராசியர்கள், எவர்கிரீன் கல்வி குழும நிர்வாகிகள் பங்கேற்று இது தொடர்பாக விரிவாக விளக்கவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளனர்.
0Shares