ஆவண எழுத்தர்களுக்கான தேர்வை நடத்த ஹென்றி கடிதம்
![]()
ஆவண எழுத்தர்களுக்கான தேர்வினை நடத்திட கோரி முதல்வருக்குபெயிரா கடிதம்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழகத்தில் ஆவண எழுத்தர்களின் பற்றாக்குறையினை போக்கிடவும், படித்துவிட்டு வேலையில்லா இளைஞர்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கிடும் வகையிலும் ஆவண எழுத்தர்களுக்கான தேர்வினை விரைந்து நடத்திட வேண்டுமென கோரிக்கை வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்
தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிய தங்களின் சீரிய தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியில், தமிழக அரசுக்கு அதிக வருவாய் தரக்கூடிய துறைகளில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை முக்கிய இடம் வகிப்பதுடன் மற்றும் மாநிலத்தின் வரி வருவாயில் சிறப்பான பங்களிப்பினை வழங்கி வருவதுடன், இத்துறையின் மூலம் கிடைக்க பெறும் வருவாய் மூலம் மாநிலத்தின் கட்டமைப்பை மேம்படுத்திடவும் மற்றும் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் மிக முக்கிய ஆதாரமாக உள்ளன.
மேற்கண்ட வகையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 27 ஆண்டுகளாக ஆவண எழுத்தர் தேர்வுகள் நடத்தப்படாததின் காரணமாக போதிய ஆவண எழுத்தர்கள் இல்லாத அவல நிலை நிலவுகிறது.
தமிழக அரசு ஆவண எழுத்தர்களின் பற்றாக்குறையை உணர்ந்து, பதிவுத்துறை 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின் போது ஆவண எழுத்தாளர்களுக்கு உரிமம் வழங்கும் தொடர்பான தேர்வு பதிவுத்துறை தலைவர் அலுவலகம் மூலம் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு புதிய ஆவண எழுத்தர்களுக்கான உரிமம் வழங்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசாணை (நிலை)எண் 158, நாள்: 27.10.2022 அன்று வெளியிடப்பட்டு ஏறக்குறைய 3 ஆண்டுகள் கடந்தும் இதுநாள் வரையில் ஆவண எழுத்தர் உரிமம் பெறுவதற்கான தேர்வுகள் நடத்தப்படாமல் கிணற்றில் போட்ட கல் போல் உள்ளது.
கடந்த சில வருடங்களாக பொதுமக்கள் நிலங்கள் மற்றும் வீடுகள் வாங்குவதை பாதுகாப்பான முதலீடாக கருதுவதின் காரணமாக, தமிழகத்தில் ஆவண பதிவுகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் தற்பொழுது 589 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதேசமயம் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததோடு, ஆவண எழுத்தர்கள் உடல்நிலை சுகவீனம் மற்றும் இறப்பு போன்ற பல்வேறு காரணங்களினால் ஆவண எழுத்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதின் காரணமாக ஒரு பதிவாளர் அலுவலக எல்லையில் பதிவு செய்யும் ஆவணங்களை தயாரிப்பதற்கு போதுமானதாக இல்லாமல், சராசரிக்கும் குறைவான ஆவண எழுத்தர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். ஆகவே போலி ஆவண எழுத்தர்கள் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஆவணங்கள் எழுத நிர்ணயிக்கபட்ட கட்டணத்தை விட பொது மக்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் நிகழ்வுகளும் நடைபெறுவதுடன் போலி ஆவண எழுத்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் அபாயகரமான சூழலும் உருவாகியுள்ளது. இத்தகைய நிலைக்கு ஆவண எழுத்தர் உரிமம் தேர்வு நடைபெறாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கடந்த 27.10.2022 அன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்ட அரசாணை எண் 158 – இன் அடிப்படையில் ஆவண எழுத்தர் உரிமம் பெறுவதற்கான தேர்வு பதிவுத்துறையால் நடத்தப்படும் என்கின்ற நம்பிக்கையில் அனுபவமும், தகுதியும் வாய்ந்த படித்த பட்டம் பெற்ற இளைஞர்கள் சுயதொழில் புரிய ஆர்வமுள்ள சுமார் 30,000க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத தயாராக இருந்த நிலையில், தமிழக அரசு தேர்வினை நடத்துவதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவது கவலை அளிக்கிறது. மேலும் இத்தேர்வில் கலந்துகொண்டு தேர்வாகி உரிமம் பெற்று தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையுடன் காத்திருந்தவர்களுக்கு தமிழக அரசின் இத்தகைய மெத்தனப்போக்கு அதிர்ச்சியையும் – கவலையையும் அளிப்பதுடன், தமிழக அரசின் மேல் இவர்களுக்கு அவநம்பிக்கையும் மற்றும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் பதிவு அலுவலகத்தில் போதிய ஆவண எழுத்தர்கள் இல்லாததால் உரிய நேரத்தில் ஆவண பதிவுகள் மேற்கொள்ள இயலாததால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, தமிழக அரசுக்கு வரவேண்டிய வருவாயும் காலதாமதம் ஏற்பட்டு சில நேரம் தடைபடுகிறது.
மேலும் ஆவண எழுத்தர் உரிமம் தேர்வு தொடர்பாக திருவண்ணாமலை மாநகரத்தில் கடந்த 05.01.2025 அன்று நடைபெற்ற எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 13- வது தேசிய ரியல் எஸ்டேட் எழுச்சி மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றான ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தேர்வினை விரைந்து நடத்திட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனை தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பெயிரா கூட்டமைப்பின் சார்பாக ஆவண எழுத்தர் உரிமம் தேர்வினை விரைந்து நடத்திட வேண்டுமென வலியுறுத்தி கடிதங்கள் வாயிலாகவும் பலமுறை கோரிக்கை வைத்திருந்தோம்.
ஆகவே பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கண்ட பிரச்சினையை தங்களின் மேலான கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் அரசாணை எண் 158-இன் படி ஆவண எழுத்தர் தேர்வினை விரைந்து நடத்தி உரிமம் பெற்ற எழுத்தர்களின் பற்றாக்குறையைப் போக்கிடவும், ஆவணங்கள் எழுதும் பணியை முறைப்படுத்தி ஆவண எழுத்தர்களின் வாழ்வில் ஒளியேற்றிடும் வகையிலும், போலி ஆவண எழுத்தர்கள் உருவாகுவதை தடுத்திடும் வகையிலும், படித்துவிட்டு வேலை இல்லாத இளைஞர்களுக்கு சுய தொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கிடும் வகையிலும் தாங்கள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு தகுந்த தீர்வினை விரைந்து ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெயிரா கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகோள் விடுத்து டாக்டர்.ஆ.ஹென்றி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

