வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
![]()
பட்டரைபெரும்புதூரில் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி :
திருவள்ளூர் அக் 30 : திருவள்ளூர் மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்த நிலையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்தது. இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூரில் பழங்குடியினர் வசிக்கும் காட்டுநாயக்கன் குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக இப்பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்த மழை தண்ணீரில் பாம்பு தேள் அட்டைப்பூச்சி போன்ற விஷ பூச்சிகள் வீட்டிற்கு வருவதாகவும் இதனால் உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதாகவும் கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

