மழைநீரை வெளியேற்ற ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றப்படும் பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு :
திருவள்ளூர் அக் 30 : வடகிழக்கு பருவமழை மற்றும் மோன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம் பாக்கம் பெரிய ஏரி பகுதியில் நீர்வளத்துறை சார்பில் நீர் வரத்து கால்வாய்கள் அகலப்படுத்துதல் தொடர்பாகவும், வேப்பம்பட்டு ஊராட்சி பிரதான சாலையில் வருவாய் துறை சார்பில் மழைநீர் சிறுபாலங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும் பணிகள் தொடர்பாகவும், ஊராட்சி ஒன்றியம் நத்தம்பேடு ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக வெளியேற்றப்படும் பணிகள் தொடர்பாகவும், திருநின்றவூர் நகராட்சி இந்திரா நகர் பகுதி மற்றும் நெமிலிச்சேரி பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக வெளியேற்றப்படும் பணிகள் தொடர்பாகவும், ஆவடி மாநகராட்சி உட்பட்ட ஜோதி நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றப்படும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டு பேசினார்.
நத்தம்பேடு கிராமத்தில் ஒரு சில ஏரி ஒட்டிய பகுதிகளில் மக்கள் குடியிருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் பட்டா ஏதும் வழங்கப்படவில்லை. பல வருடங்களாக நீர்வழி பாதையில் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இன்றைக்கு அனைத்து துறை அதிகாரிகளுடன் அப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. 15-20 வீடுகளில் மக்கள் இருக்கிறார்கள். மற்ற வீடுகளில் உள்ள மக்களை நிவாரண முகாம் மற்றும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் தேவையான இதர அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு பெய்த மழையில் 7, 8 இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது, அந்த பகுதிகளில் அலுவலர்கள், மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எங்கெல்லாம் கால்வாய்கள் அடைப்பு இருக்கின்றதோ அதை சரி செய்யும் பணியினையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு பெய்த மழைநீர் உடனுக்குடன் வெளியேற்றப்படும் என ஆட்சியர் கூறினார்.
இதில் ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார்,ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜவேல், திருநின்றவூர் நகர்மன்ற தலைவர் உஷாராணி ரவி, திருநின்றவூர் ஆணையர் ஜீவிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) யுவராஜ், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் உஷா, திருவள்ளூர் வட்டாட்சியர் பாலாஜி, ஆவடி வட்டாட்சியர் கண்ணன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

