தரைப்பாலம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

Loading

அல்லிக்குழி கிராமத்தில் ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் விவசாய நிலத்திற்கு செல்ல முடியாத நிலை : சேறும்சகதியான் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றவும் தரைப்பாலம் அமைக்கவும் விவசாயிகள் கோரிக்கை :
திருவள்ளூர் அக் 26 :திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் அல்லிக்குழி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டோர் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பூ, கத்திரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய் வகைகளை விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில் அருகிலிருந்து விவசாய நிலத்திற்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் மாட்டு வண்டியில் செல்வதற்கும், நடந்து செல்வதற்கும் மிகுந்த சிரமமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஈஸ்வரன் கோயிலில் இருந்து 500 மீட்டர் தூரம் தாண்டிய பிறகு 100 மீட்டர் தூரத்திற்கு உள்ள ஓடையை தாண்டி தான் விவசாய நிலத்திற்கு செல்ல முடியும். இந்த அல்லிக்குழி கிராமம் என்பது தாழ்வான பகுதியாக இருப்பதால் மேடான பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீரானது இந்த ஓடை வழியாகத் தான் செல்கிறது. கடந்த சில நாட்களாக  பெய்த கன மழையால் இந்த ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாயிகள் இந்த ஓடையை கடக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  இதனால் பயிரிடப்பட்ட பூக்கள் மற்றும் காய்கறிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சேறும் சகதியுமாக உள்ள 500 மீட்டர் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்ற வேண்டும். ஓடை பகுதியில் தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் அப்பொழுது தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும், குழந்தைகளின் கல்வி, மற்றும் பொருளாதாரம் மேம்படும் என்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே பல முறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் இனியாவது கண்டு கொள்ளுமா என்பது தான் அல்லிக்குழி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
0Shares