மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா
![]()
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.விஜய்வசந்த் அவர்கள், அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்
மத்திய மாநில அரசின் சார்பில் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் பயன்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவை ஊரக ஏழை, எளிய பொதுமக்களுக்கு சென்றடைந்து, திட்டங்கள் அனைத்தும், திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி செயல்படுவதை கண்காணிக்க மத்திய அரசு மாவட்ட அளவில் மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து மாவட்டத்தின் வளர்ச்சிதிட்டப் பணிகளை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.விஜய்வசந்த் அவர்கள் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று (24.10.2025) நடைபெற்றது.
இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.விஜய்வசந்த் ஆகியோர் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-
கன்னியாகுமரி மாவட்டத்தில், மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் (MGNREGS) கீழ், கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெருக்கும் வகையில், தனிநபர் விவசாய நிலங்களில் மண்வரப்பு அமைத்தல், கழிவுநீர் உறிஞ்சுக்குழி, தனிநபர் கழிப்பறை, சாலை அமைத்தல், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடம், உணவு தானிய கிட்டங்கி, பண்ணைக்குட்டை அமைத்தல், தடுப்பணை மற்றும் கால்வாய் புனரமைத்தல், ஊரக பகுதிகளிலுள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் (PMSY (G))> ஊரக பகுதி மக்கள் சுகாதாரத்தில் முன்னேற்றம் அடையவும், திறந்தவெளியில் மலம் கழித்தலை தவிர்த்தல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை ஆகியவற்றை செயல்படுத்தும் தூய்மை பாரத இயக்கம், பிரதமந்திரியின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத்திட்டம் (PMGSY)> ஒருங்கிணைந்த உள்ளூர் பொருளாதார வளர்ச்சி, மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள், கிராமப்புற பகுதிகளில் உருவாக்கும் விதமாக தேசிய ரூர்பன் இயக்கம் (National Rurban Mission)> பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் (MPLADS)> ஊரக பகுதிகளில் வாழும் மக்களுக்கு வீடுகள் தோறும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான ‘ஜல் ஜீவன் மிஷன்” (Jal Jeevan Mission)> விவசாய பெருங்குடி மக்களுக்கான நுண்ணீர் பாசனத்திட்டம் (PMKSY)> பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் (PMFBY)> மண்வள அட்டை இயக்கத்திட்டம் (SHC)> புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடுத் திட்டம; (RPMFBY), தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் NADP (RKVY), மாவட்ட தொழில் மையம் வாயிலாக பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) ஆகிய வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் மண்வள அட்டை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளின் நிலங்களில் இருந்து மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மண்ணின் தன்மை, நிலை, தேவை மற்றும் பயிரிடப்படும் பயிருக்கேற்ப உரப் பரிந்துரைகள் கொண்ட மண்வள அட்டைகள் வழங்கப்படும். நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுநாள்வரை 5,06,383 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம், துளி நீரில் அதிக பயிர் உள்ளிட்ட திட்டங்களின் பயன்பாடுகள் மற்றும் பயனடைந்த விவசாயிகள் குறித்து கேட்டறியப்பட்டது.
வேளாண் இயந்திரமயமாக்கலின் மூலம் விதைகள், உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்துதல், விவசாய பணிகளுக்கான காலத்தை குறைத்தல், ஆபத்துகளை நீக்குதல் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளின் சிரமங்களை நீக்குதல் ஆகியவை விவசாயிகளின் நிகரவருமானத்தை அதிகரிக்கும். வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் சூரிய கூடார உலர்த்தி, சூரிய மின் வேலி மற்றும் முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்கள் மானிய விலையில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளை பொறுத்த மட்டில் அரிசி மற்றும் கோதுமை சேர்த்து ஒருங்கிணைந்த உரிம அளவாக 1 முதல் 7 வரையிலான உறுப்பினர்களை கொண்ட அந்தியோதயா அன்ன யோஜனா வகை குடும்ப அட்டைகளுக்கு 35 கிலோவும், தொடர்ந்து கூடும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 5 கிலோ வீதம் கணக்கிட்டு வழங்கப்படும். நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 60,702 அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் உள்ளன. இதன் மூலம் 2,30,662 நபர்கள் பயனடைந்து வருகின்றனர். PHH குடும்ப அட்டைகளை பொறுத்தமட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,36,437 முன்னுரிமை குடும்ப அட்டை குடும்ப அட்டைகளில் 7,79,286 நபர்கள் பயனடைந்து வருகின்றனர் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டது. அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையினை அதிக பயனாளிகள் பங்கு பெறும் வகையில் அதிகரித்து மக்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் மானியங்கள் வழங்கிட தெரிவிக்கப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்டதின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகள் துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட துறைகள் குறித்தும், பள்ளிகல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், பள்ளிகளில் கழிப்பறைகள், சுற்றுச்சுவர், மேற்கூரைகள் சீரமைக்கப்பட வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பள்ளியில் மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் வாயிலாக செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தில் செப்டம்பர் 2018 முதல் தேசிய ஊட்டச்சத்து குழுமம் மூலம் போஷன் அபியான் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு போஷன் அபியான் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு ஊட்டச்சத்து பணிகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட முன்னோடி வங்கியின் செயல்பாடுகள் விவாதிக்கப்பட்டது. மாணவர்களுக்கு அதிகளவு கல்விக்கடன் வழங்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுசுகாதார துறையின் கீழ் 10 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் 29 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களும் 9 நகர்புற ஆரம்பசுகாதார நிலையங்களுமாக 48 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் கிராமங்கள் அளவில் 267 துணை சுகாதார நிலையங்களும், நகர்புறங்களில் 40 பகுதிகள் மூலமாக அனைத்து மக்களுக்கும் சுகாதார சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் மலைவாழ் மக்களின் நலனுக்காக Trible Mobile Medical Unit அதாவது மருத்துவர், செவிலியர் மற்றும் ஆய்வக நுட்புநர் அடங்கிய நடமாடும் மருத்துவ குழு இயங்கி வருகிறது. இதன் மூலம் 47 பழங்குடியினர் வாழும் கிராமங்கள் பயனடைகின்றன. தொடர்ந்து ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம், ஜனனி சுரக்ஷா காரியகிரம், முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், ராஷ்டிரியபால் சுவஸ்ய காரியகரம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம், கொல்லங்கோடு உள்ளிட்ட நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பணிகள் குறித்தும், பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் தூய்மை இந்தியா திட்டம் 2.0 பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார (மகளிர் திட்டம்) இயக்கத்தின் கீழ் தீன் தயாள் அந்தியோ யோஜானா, தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கபட்டது. மேலும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, மாநில அளவை அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மீனவர்களுக்கு சென்றடைய வேண்டும். குறிப்பாக மண்ணெண்ணெய், ரேசன் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைத்திட வழிவகை துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் – அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 9554 வீடுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 9192 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்திடவும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு வீடு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தனிநபர் பயன்பெறும் பணிகள், சமுதாய பணிகள், நீர்வள மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பணிகளின் தற்போதைய நிலைகள் குறித்து கேட்டறியப்பட்டதோடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அதிகளவு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பிரதம மந்திரி குடியிருப்புத்திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, நெகிழி கழிவு மேலாண்மை அலகு, கோபர்தன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்துரையாடப்பட்டது. மேலும் பிரதம மந்திரி கிராம சாலைத்திட்டம் I, II, III திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சாலைப்பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தடுப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டு, அனைத்து துறை அலுவலர்களும் பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் திரு.வினய்குமார் மீனா, இ.ஆ.ப., நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது திருமதி.கு.சுகிதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பத்ஹூ முகமது நசீர், இணை இயக்குநர் (பொ) திரு.ஜெங்கின் பிரபாகர் (வேளாண்மை), ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவிட், இணைஇயக்குநர் மரு.சகாய ஸ்டீபன் ராஜ் (மருத்துவம்), துணை இயக்குநர்கள் திரு.நக்கீரன் (தோட்டக்கலை), திருமதி.கீதா (வேளாண் வணிகம்), மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திரு.சத்தியமூர்த்தி, உதவி இயக்குநர் திரு.அன்பு (ஊராட்சிகள்), செயற்பொறியளர், அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
————————————————————————–வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம்.

