தீபாவளி திருநாள் ஃபெயிரா தலைவர் வாழ்த்து

Loading

உலகெங்கிலும் வாழும் இந்து சகோதர, சகோதரிகளுக்கு தீப ஒளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தும், தீபாவளி திருநாளை கொண்டாடுவதின் வரலாற்றையும் மற்றும் பட்டாசுகள் வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பதிவினை இந்நன்னாளில் பகிர்வதில் சாலச் சிறந்ததாக இருக்குமென கருதி, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்..

தீபாவளி பண்டிகை உலகம் முழுவதிலுமுள்ள இந்து, சீக்கிய, ஜைன, மற்றும் பௌத்த மதத்தினரால் கொண்டாடப்படுகின்றது. இத்தீபாவளி திருநாளில் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து. அவரவர் இல்லங்களில் தீப விளக்கேற்றி, இல்லங்களையும், உள்ளங்களையும் ஒளிமயமாக்கி மகிழ்ந்திடும் திருநாள் தான் தீபாவளி திருநாள் எனவும்,

தீபாவளி பண்டிகையை கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதன் முக்கிய சாராம்சம், தீயவர்களை கடவுள் நிச்சயம் அழிப்பார் எனவும் – நல்லோர்களை கைவிடாமல் காப்பார் என்பதாகும்.

மேலும் பண்டிகைகள் கொண்டாடப்படுவதின் முக்கிய நோக்கம், மக்கள் அனைவரும் தங்களின் கவலைகளை மறந்து, குடும்பத்தினர், உற்றார், உறவுகள் மற்றும் நண்பர்களுடன் ஒன்று கூடி மகிழ்ச்சியாக இருப்பதற்காகதான் எனவும், இந்துப் புராணங்களில் இந்துக்கள் இந்த இத்தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

குறிப்பாக நரகாசுரன் என்பவர் இந்து தொன்மவியலின்படி, திருமாலின் வராக (மகாவிஷ்ணுவிற்கு) அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்த ஒரு அசுர மன்னன். அவர் பிரக்ஜோதிஷ- காமரூபாவின் ஆட்சியாளராக இருந்துள்ளார். நரகாசுரன் தன் கடும் தவத்தின் மூலம் இவர் தன் தாயின் மீது கொண்ட பெரும் நம்பிக்கையின் அடிப்படையில் பிரம்மாவிடம் தன் தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என வரம் பெற்று இருந்தார்.

நரகாசுரன் தான் பெற்ற வரத்தின் காரணமாக ஆணவம் கொண்டு மக்களையும், தேவர்களையும், முனிவர்களையும் கடும் கொடுமைகளை செய்யத் தொடங்கினார், நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததினால் தேவாதி தேவர்களும், முனிவர்களும் கடும் துயரங்களுக்கு உள்ளாகி தங்களை நரகாசுரனிடமிருந்து காத்து அருளுமாறு மகாவிஷ்ணுவை சந்தித்து முறையிட்டுள்ளனர். ஆகவே பகவான் மகாவிஷ்ணு தனது எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரம் எடுத்து நரகாசுரனை வதம் செய்வதற்காக போர் புரிய தயாரானார். கிருஷ்ணரின் மனைவியருள் ஒருவரான சத்யபாமா தேரோட்டியாக இருந்து இப்போர்களத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

பகவான் கிருஷ்ணருக்கும் நரகாசுரனுக்கும் இடையே நடைபெற்ற போரின் போது நரகாசுரன் எய்த அம்பொன்று கிருஷ்ணரை தாக்கியதால் அவர் மயக்கம் அடைந்ததுள்ளார். (இதுவும் கிருஷ்ணரின் லீலைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது) இதனால் கோபமுற்ற சத்யபாமா, தனது மகனான நரகாசூரனை வதம் செய்துள்ளார், இப்படி நரகாசுரன் சம்ஹாரம் செய்யப்பட்ட அந்த நாளைத்தான் ‘தீபாவளி’ பண்டிகையாக மக்கள் கொண்டாடுவதாகவும், நரகாசுரனை சம்ஹாரம் செய்த நாளானதால், இந்த நாள் ‘நரக சதுர்த்தசி’ என்றும் தீபாவளி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் நரகாசுரன் தனது இறப்பை அனைவரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டுமென வேண்டியதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயம் ராமாயணத்தில் இராமன், இராவணனை அழித்து தனது வன வாசத்தை முடித்து கொண்டு சீதா தேவி மற்றும் தம்பி இலக்குமணனுடன் அயோத்தி நகருக்கு அவர்கள் திரும்பிய திருநாளை அயோத்தி மக்கள் அவர்களை வரவேற்க்கும் விதமாக, அகல் விளக்குகளை ஏற்றிவைத்து வரவேற்ற நாளை தீபாவளி என்றும், தீப ஒளி என்றும் கூறுகின்றனர்.

தீபாவளி திருநாள் அன்று மக்கள் அதிகாலை எழுந்து தலைக்கு எண்ணைய் வைத்து நீராடி புத்தாடை அணிந்து, இறைவனை வழிபட்டு, பெற்றோர் மற்றும் பெரியோர்களை வணங்கி ஆசி பெற்று, பலவிதமான பலகாரங்களை உண்டு மகிழ்ந்து பட்டாசுகளை வெடித்து அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடும் நன்னாள் தான் இந்நாள்.

தீபாவளி திருநாள் என்றாலே பட்டாசுகளின் வெடி சத்தமும், இரவை பகலாக்கும் வாணவேடிக்கைகளும் நம் அனைவரின் நினைவிற்கும் வரும். இந்த தினத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான பட்டாசுகளை வெடித்து மகிழ்வார்கள். குறிப்பாக சிறார்கள் பட்டாசுகளை வெடிக்கும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் தருணங்களில் கவன குறைவின் காரணமாக உடலில் தீக்காயங்கள் மற்றும் ஆடைகளில் தீப்பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகவே சிறார்களை பெரியவர்கள் உடனிருந்து கண்காணிப்பது தங்களின் கடமை ஆகும். அதுபோல் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் மற்றும் வாகனங்களுக்கு மிக அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை கையில் பிடித்து வெடிப்பது, தூக்கி வீசுவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

தீபாவளி திருநாளில் நாடு முழுவதும் பட்டாசு மற்றும் வானவேடிக்கைகள் நடைபெறுவதன் காரணமாக அன்றைய தினம் காற்றின் மாசுபாடு மிக அதிக அளவில் அதிகரித்து காணப்படும் .அதுபோல் அதிக சத்தம் எழுப்பகூடிய வெடிகளை வெடிப்பதின் மூலம் ஏற்படும் ஒலியின் அளவு (டெசிபெல்) மிக மிக அதிகமாக இருக்கும்.  ஆகவே நாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள முதியோர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் நலனை கவனத்தில் கொள்வது மிக முக்கியமாகும். காரணம் பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் ஏற்படும் மிகப்பெரிய சத்தங்கள் அவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுபோல் காற்றின் மாசுபாடு மிக அதிக அளவில் ஏற்படுவதுடன், பட்டாசுகளின் மருந்து நெடிகளின் காரணமாக சுவாச பிரச்சினை உள்ளவர்கள் சுவாசிப்பதற்கு மிக கடினமான சூழல் ஏற்பட்டு மூச்சு திணறல் போன்ற உபாதைகள் பெரும் அளவில் ஏற்படும்.

மேற்கண்டவைகளை மக்கள் தங்களின் கவனத்தில் கொண்டு, அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிப்பதை தவிர்த்திட வேண்டுமெனவும், பசுமை பட்டாசுகளை பயன்படுத்திட வேண்டுமெனவும் தமிழக அரசு அறிவுறுத்துள்ளது. மேலும் அரசு பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளை மக்கள் கடைப்பிடித்து, சீன பட்டாசுகளை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத பசுமை பட்டாசுகளை பயன்படுத்தி அனைவரும் மாசில்லாத மற்றும் பாதுகாப்பான தீபாவளி பண்டிகையினை மகிழ்வுடன் கொண்டாடிட வேண்டும் என பொதுமக்களின்  நலன் வேண்டி எனது வேண்டுகோளாக முன் வைக்கிறேன்.

மேலும் தலை தீபாவளி புதுமணத் தம்பதிகளின் வாழ்வில் மறக்க முடியாத தீபாவளி திருநாளாக இந்நாள் என்றென்றும் நினைவில் இருக்கும். புது மாப்பிள்ளைக்கு மாமனார் வீட்டில் கிடைக்கும் ராஜ உபசாரம் அவர்களை அசர வைக்கும். மாமனார் தன் மருமகனுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார். மாமியார் தனது பங்கிற்கு விதவிதமான பலகாரங்கள் மற்றும் உணவு வகைகளை சமைத்து தனது மருமகனை திக்கு முக்காட வைப்பார். பொதுவாக தலை தீபாவளி என்றால் மாப்பிள்ளைகளின் மிடுக்கு சற்று அதிகமாக இருக்கும். மாப்பிள்ளையின் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும் என்றால் தன் விரலில் தங்க மோதிரம் போட வேண்டும் என்று வேடிக்கையாக கூறுவார்கள். விரலில் மோதிரம் போடும் வரை தலையில் எண்ணை வைக்க மாட்டேன் என்று மாப்பிள்ளை அடம்பிடிக்கும் வேடிக்கையான நிகழ்வுகளும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. 

ஆக மொத்தம் தலை தீபாவளி புதுமண தம்பதியர், மாமனார், மாமியார், மச்சான், கொழுந்தியா, உறவினர்கள் என குடும்ப உறவுகளிடையே பாசத்தையும், நேசத்தையும் பகிர்ந்து உறவின் மேன்மையையும் பலப்படுத்திடும் மகிழ்ச்சியான நாளாக தலை தீபாவளி அமைகிறது என்றால் அது மிகையாகாது.  எனது இல்லத்திலும் இந்த ஆண்டு தீபாவளி தலை தீபாவளியாக கொண்டாடப்படுவதில் நானும் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

தீபாவளி திருநாளாம் இந்நன்னாளில், மக்கள் மனங்களில் உள்ள தீய எண்ணங்கள் அகலட்டும், மகிழ்ச்சி பெருகட்டும், தீப ஒளியில் இருள் அகன்று வெளிச்சம் கிடைப்பது போல, நம் அனைவரின் வாழ்விலும் இல்லாமை என்னும் இருள் நீங்கி செல்வம் பெருகட்டும், தொழில் சிறக்கட்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீபாவளி திருநாளை செல்வம் (பணம்) இருப்பவர்கள், இல்லாதோருக்கு வழங்கி, மகிழ்வுடனும் மற்றும் பாதுகாப்புடனும் அனைவரும் ஒன்று கூடி இத்திருநாளை கொண்டாடுவோம்.  நல் உறவுகளையும், நட்புக்களையும் பேணி காத்து நல்ல முறையில் வளர்ப்போம் என பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தனது தீப ஒளித் திருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

0Shares