ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம்.. திருவண்ணாமலை கோயிலில் திறப்பு!
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுக்கள் காப்பகத்தை துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோயிலில் ரூ.10.53 கோடி மதிப்பீட்டில் கோபுரங்கள், விமானங்கள் மற்றும் கல்காரத்திற்கு ஒளிரூட்டல் பணியை துவக்கி வைத்து ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகத்தை சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் திருவண்ணாமலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் சி.என்.அண்ணாதுரை எம்பி கோவில் ஆணையர் பரணிதரன் தாசில்தார் சு.மோகனராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பஞ்சபூத தலங்களுள் அக்னி தலமான திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இத்திருக்கோயிலுக்கு வெளியூர், பல்வேறு வெளி மாநில மக்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் என பெருமளவில் வருகின்றனர். அதிலும் பௌர்ணமி மற்றும் தீப திருவிழா காலங்களில் இலட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். அதன்படி தமிழ்நாடு அரசு திருக்கோயில் மற்றும் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மேம்படுத்த பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் இரவு நேரங்களில் பக்தர்கள் கண்குளிர, மனம் மகிழ பல வண்ணங்களில் திருக்கோயிலில் உள்ள 9 கோபுரங்கள், 17 விமானங்கள் வண்ண மின்விளக்குகளால் ஒளிரூட்டும் பணிகளும், ரூ. 82 இலட்சம் மதிப்பீட்டில் இத்திருக்கோயிலின் இராஜகோபுரத்தின் கல்காரம் ஒளிரூட்டும் பணிகளும், ரூ. 1.76 கோடி மதிப்பீட்டில் மேற்கு கோபுரம் (பேகோபுரம்), தெற்கு கோபுரம்( திருமஞ்சன கோபுரம்) மற்றும் வடக்கு கோபுரம் (அம்மணி அம்மன் கோபுரம்) கல்காரங்களில் ஒளிரூட்டும் பணிகள் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் கிரிவலப்பாதையில் சோணாநதி தோப்பு அருகில் 11218 சதுரடியில் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோயில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.