மின் இணைப்பு கேட்டு 45 நாட்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்காத மின்வாரிய ஊழியர்கள்..புகார் அளித்த தம்பதி!

Loading

திருவள்ளூர் அருகே வீடு கட்டுவதற்காக மின் இணைப்பு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்து 45 நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியான மேல்நல்லாத்தூர் பட்டரை மற்றும் அதிகத்தூர் ஆகிய பகுதிகளில் புதிதாக வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு கேட்டு ஆன்லைனில் சிலர் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி மேல்நல்லாத்தூர் பட்டரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருவதாகவும் இவர் மேல்நல்லாத்தூர் பட்டரை பகுதியில் சொந்தமாக வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார்.

இதற்காக தற்காலிக மின் இணைப்பு கேட்டு மணவாளநகர் துணை மின்நிலையத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். அதே போல் மணவாளநகர் அடுத்த அதிகத்தூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரும் புதிதாக வீடு கட்ட மின் இணைப்பு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்து 45 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை ஆய்வு செய்யாமலும், மின் இணைப்பு வழங்காமலும் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், நேரில் விசாரணை செய்ய சென்றாலும் அலட்சியமாக பதில் சொல்வதால் திருவள்ளூரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து 45 நாட்களை கடந்தும் நடவடிக்கை எடுக்காத மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் கூலித் தொழில் செய்து புதிதாக வீடு கட்டும் நிலையில் தண்ணீருக்காக வீணாக செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

0Shares