இணை சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் பதிவு தாமதம்..காரணம் என்ன?
திருவள்ளூரில் உள்ள இணை சார் பதிவாளர் அலுவலகங்களில் காலை முதல் மாலை 5 மணி வரை சர்வர் செயலிழப்பு காரணமாக பத்திரம் பதிவு தாமதம் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகம், இ- சேவை மையம், நில அளவையர் அலுவலகம் போன்ற பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் வளாகத்தின் பின்புறம் 2 சார் பதிவாளர் அலுவகங்கள் செயல்பட்டு வருகிறது. அதாவது,.இணை சார்பதிவாளர் அலுவலகம் 1-ல் 45 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கும், இணை சார்பதிவாளர் அலுவலகம் 2-ல் 35 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
பொது மக்களின் வசதிக்காக ஒரே கட்டிடத்தில் இரண்டு அலுவலகங்களாக செயல்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு அலுவலகத்திலும் 100 நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்து அதன்படி வாடிக்கையாளர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சர்வர் வேலை செய்யாததால் ஒருவருடைய பத்திரமும் பதிவு செய்யப்படாததால் பதிவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். அலுவலகத்தில் போதிய இட வசதி இல்லாததாலும், இந்த வீடு கழிவறை மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மாலை 5 மணிக்கு மேல் சர்வர் வேலை செய்ய தொடங்கியதையடுத்து அவசரம் அவசரமாக பத்திரப்பதிவு செய்யும் பணி நடைபெற்றது. ஆனால் 8 மணி வரை கிட்டத்தட்ட 30 நபர்களுக்கு மட்டுமே பத்திர பதிவு செய்ததால் மீதமுள்ள நபர்களுக்கு பத்திர பதிவு செய்ய எவ்வளவு நேரம் ஆகுமோ என்ற அச்சம் நிலவுவதாகவும், நிலம் வாங்குவதற்காக கொடுப்பதற்காக வைத்திருக்கும் லட்சக்கணக்கான பணத்தை பாதுகாப்பாக வைப்பது எப்படி என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பத்திரப்பதிவுத்துறையின் அலட்சியத்தால் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் வளாகத்தின் பின்புறம் இந்த 2 சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் பத்திரப்பதிவு செய்ய வருபவர்கள் கார், இரு சக்கர வாகனங்களில் வருவதால் வழியில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மாற்று இடத்தில் இந்த இணை சார் பதிவாளர் அலுவலகத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.