கல்லூரி பேராசிரியருக்கு ஜனாதிபதி விருது.. கல்லூரி தாளாளர், முதல்வர் பாராட்டு!
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகப் பணியாற்றி வரும் முனைவர் சு. ஜெயக்குமாரி
தேசிய அளவிலான நாட்டு நலப் பணித்திட்டப் பணிக்கான ஜனாதிபதி விருது பெற்றார்.
நியூ டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மண்டேவியா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் திருமதி. திரௌபதி முர்மு விருதினை நேற்று வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி
இவர் ஏற்கனவே 2023 -ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான சிறந்த நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் விருதை பெற்றார்.
2022 ஆம் வருடம் இமாச்சல பிரதேசம் மணாலியில் அமைந்துள்ள அடல் பிகாரி வாஜ்பாய் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மௌண்ட்டினரிங் அண்ட் அலைடு ஸ்போர்ட்ஸ் எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் நடைபெற்ற தேசிய சாகச முகாமில் கலந்து கொண்டு கல்லூரிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்த்தார். 2025 பிப்ரவரி மாதம் விவேகானந்தா கல்லூரியில் தமிழ்நாடு அரசின் நிதி ரூபாய் 9.69 லட்சம் பெற்று 14 மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் மற்றும் நலப் பணித்திட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட தேசிய ஒருமைப்பாட்டு முகாமுக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக இலக்கியப் பணி செய்து வரும் இலக்கியப் பட்டறை அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வரும் இவர் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், முனைவர் பட்ட ஆய்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டியாகவும் பல துறைகளில் செயலாற்றி வருகிறார்.
நாட்டு நலப்பணித் திட்டத்தின் மிக உயரிய விருதான மத்திய அரசின் தேசிய விருதினை இந்திய அளவில் பத்து பேர் பெற்றனர். அதில் தமிழ்நாட்டிலிருந்து இவர் மட்டும் பெற்றுள்ளமை குமரி மாவட்டத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாகும். விருது பெற்ற இவரை கல்லூரி தாளாளர், முதல்வர் உள்ளிட்ட நிர்வாகத்தினர், இலக்கிய ஆளுமைகள் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.