அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவங்கள்.. இரும்புக் கரம்” கொண்டு ஒடுக்க அதிமுக உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்!
செயின் பறிப்பு திருடர்களை “இரும்புக் கரம்” கொண்டு அடக்கி, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு உறுதியான பாதுகாப்பு வழங்க வேண்டும். புதுச்சேரி காவல்துறைக்கு அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு. ஓம்சக்தி சேகர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு. ஓம்சக்தி சேகர் அவர்களின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி மாநிலத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பு குறைபாட்டையும் உருவாக்கி வருகின்றன.
முக்கியமாக முதியோர் மற்றும் இளம் பெண்களை குறிவைத்து இந்தக் குற்றச்செயல்கள் நடைபெறுவது தொடர்ச்சியான கதையாக மாறியுள்ளது. இதனால் பெண்கள் தனிமையில் வெளியில் செல்லும் நிலையிலே பயம் மற்றும் பதட்டம் நிலவுகிறது.
இந்த நிலைக்கு முக்கிய காரணமாக காவல்துறையின் ரோந்து நடவடிக்கைகள் குறைந்து போனது என்றே பொதுமக்கள் கருதுகின்றனர். காவலர்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் தங்கி செயல்படுவது குற்றவாளிகளுக்கு தைரியம் அளிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினாலே செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியும்.
மேலும், சில சந்தர்ப்பங்களில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யாமல், சாதாரண ஜெனரல் டயரி (GD) பதிவாக மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய நடவடிக்கைகள் காவல்துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி, குற்றவாளிகள் தைரியம் பெறும் சூழலை உருவாக்குகின்றன.
குற்றங்களை மறைப்பதற்குப் பதிலாக, எதிர்காலத்தில் அவை நடைபெறாமல் தடுக்க காவல்துறை உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திருடர்கள் சட்டத்தின் முன் பயந்து நடுங்கும் சூழலை உருவாக்குவதே தற்போதைய அவசியமாகும்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த காலத்தில், குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியது. அதுபோன்ற உறுதியான நடவடிக்கைகள் புதுச்சேரியிலும் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
செயின் பறிப்பு திருடர்களை “இரும்புக் கரம்” கொண்டு அடக்கி, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு உறுதியான பாதுகாப்பு வழங்க வேண்டும். புதுச்சேரி காவல்துறை ரோந்து நடவடிக்கைகள் இரவு பகலாக தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், புதுச்சேரியில் உள்ள பல முக்கிய காவல் நிலையங்களில் காவல்துறையினரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதும் முக்கிய காரணமாகும். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. அந்த நாட்களில் வெளியூரிலிருந்து வருகிற சுற்றுலா பயணிகளை கண்காணிக்க காவல்துறைக்கு மிகப்பெரிய சுமையாக உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கவனிப்பில் குறைபாடு ஏற்படுகிறது.
எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக அனைத்து காவல் நிலையங்களிலும் கூடுதல் காவலர்களை நியமித்து, காவல் ரோந்துகளை அதிகரித்து, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உழைப்பால் சம்பாதித்த நகைகள் மற்றும் சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே புதுச்சேரி மக்களின் ஒருமித்த கோரிக்கையாகும். இதனை நிறைவேற்றுவது அரசு மற்றும் காவல்துறையின் முதன்மையான பொறுப்பாகும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.