சுப்ரீம் கோர்ட்டை அணுக விஜய் திட்டம்…சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை!
த.வெ.க மாநில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கரூர் மாவட்டச்செயலாளர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட 2 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.
அப்போது தலைமைப்பண்பு இல்லாதவர் விஜய் என்று விமர்சித்த நீதிபதி, அதேபோல் த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டது தொடர்பாக விசாரணை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். ஐகோர்ட்டு உத்தரவு விஜய்க்கும், த.வெ.க.வுக்கும் பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனையடுத்து விஜய், வக்கீல் அணி நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், கட்சியின் நலன் கருதி சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது என முடிவு செய்யப்பட்டது.
நாளை (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விஜய் தரப்பு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.இதற்கிடையே, புஸ்சி ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் சட்ட வல்லுனர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.