குலசை தசரா சூரசம்ஹார நிகழ்வு கோலாகலம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Loading

குலசை தசரா திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மன் வீதியுலா வரும் நிகழ்வு மற்றும் தினமும் திருவிழாவன்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

5-ம் திருவிழாவில் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இக்காலத்தில் அம்மனை தரிசித்தால் நன்மக்கள் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

கடந்த 28-ந்தேதி வேடமணியும் தசரா குழுவினர் காலை முதலே வரத்தொடங்கினர். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று காப்பு கட்டிக்கொண்டனர். அன்று இரவில் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடமணிந்து ஊர் ஊராக சென்று மேளம், டிரம் செட், செண்டா மேளம், கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

9-ம் திருவிழாவான நேற்று இரவில் அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் கல்வி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த நிலையில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலில் தன் வேடத்துடன் வந்த சூரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சிம்மம், எருமை மற்றும் சேவல் முகத்துடன் வந்த சூரனையும் அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின்னர் சூலாயுதம் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதனை காண்பதற்காக கடற்கரையில், நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். சூரசம்ஹார நிகழ்வையும் கண்டு களித்தனர்.

நள்ளிரவுஅதன்பிறகு அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தேர் நிலைக்கு வந்தவுடன் அதிகாலை 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

0Shares