ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..முதல் குற்றவாளிக்கு தீவிர சிகிச்சை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஏ1 குற்றவாளி நாகேந்திரனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டிற்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த கொலை சம்பவத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ1 குற்றவாளி நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்துள்ளனர். 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரித்த செம்பியம் போலீசார் வழக்கின் குற்றப்பத்திரிகையை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதையடுத்து , இந்த வழக்கை மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வரும் நிலையில் சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், ஆயுள் தண்டனை கைதியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு திடீர்ரென உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லீரல் பாதிப்பால் நாகேந்திரனின் உடல்நிலை மோசமானதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.