கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்.. விஜய் மீது திருமாவளவன் கடும் விமர்சனம்!
![]()
உயிர் பலியில் விஜய் அரசியல் ஆதாயம் தேடுவதாக திருமாவளவன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;-கரூரில் நடந்த கொடூரம் நாட்டை உலுக்கிய பேரவலமாகும். 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிந்தது பொறுப்பில்லாத போக்குகளால் நேர்ந்த பேரிடராகும்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதனால் உயிர் பிழைத்துள்ளனர். அந்த பெருந்துயரம் குறித்து தகவலறிந்த உடனே மின்னல் வேகத்தில் இயங்கி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை களமிறக்கிவிட்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தியதோடு சில மணி நேர இடைவெளியில் தனிவிமானம் பிடித்து நள்ளிரவு வேளையில் கரூருக்குச் சென்று அங்கே கதறியழுத மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், காப்பாற்றும் நடவடிக்கைகளை முதலமைச்சர் முடுக்கிவிட்டார்.
நேற்று விஜய் வெளியிட்டுள்ள காணொளி பதிவில் அவர் முதல்வர் மீது பழிசுமத்தும் வகையில் பேசியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நடந்த பெருந்துயரத்திற்காக அவர் வருந்துவதாகத் தெரியவில்லை. பத்துமணி நேரமாகத் தன்னைக் காணும் பேராவலோடு காத்திருந்தவர்கள், இந்தப் பேரவலம் நடந்தேறியது என்கிற உண்மையை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இந்த உயிர்ப்பலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதையே நோக்கமாக்க் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. இதன்மூலம் அவர் அம்பலப்பட்டு நிற்கிறார்.
‘பாஜக சொல்வதையே விஜய் அவர்களும் சொல்கிறார்’ என்று பாஜக மேலிடம் அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவைச் சார்ந்த அனுராக் தாகூர் கூறுவதிலிருந்தே, அவர் யார் பிடியில் சிக்கி உழலுகிறார் என்பதை அறியமுடிகிறது.
பாஜக உண்மை அறியும் குழுவை அமைத்திருப்பதிலிருந்தும், திமுக அரசுக்கு எதிராக இச்சூழலை மடைமாற்றம் செய்ய முயற்சிப்பதிலிருந்தும், விஜய், ‘பாஜகவினரின் கருவி தான்’ என்பதையும் உறுதிப்படுத்துகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டு மக்கள் அதாவது, அவர்களின் அரசியல் சதிகளை முறியடிக்க அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் ஒரணியில் திரண்டு நிற்கவேண்டியது தவிர்க்க முடியாததாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

