ஆயுத பூஜை.. கடை ,சந்தைகளில் அலைமோதிய கூட்டம்!
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் கடை தெரு மற்றும் சந்தைகளில் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் கூடியதால் பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆயுதபூஜை இன்று கொண்டாடப்படுகிறது.இதையொட்டி பொதுமக்கள் ஆயுதபூஜைக்கு தேவையான பூக்கள், பழங்கள், அவல், பொரி, , கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்வார்கள்.
இதனால், சென்னையில் கோயம்பேடு சந்தை, பாரிமுனை பூக்கடை பஜார், மயிலாப்பூர் சன்னதி தெருக்கள், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம் தானா தெரு உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் ஆயுத பூஜை பொருட்களின் விற்பனை படுஜோராக நடந்தது.
இதனால், விற்பனை அமோகமாக இருந்தது. சிறிய வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.40-க்கும், பெரிய வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.80-க்கும், 1 பக்கா பொரி ரூ.40-க்கும், 1 கிலோ அவல் ரூ.100-க்கும்,திருஷ்டி பூசணிக்காய் பெரியது ரூ.80-க்கும், வாழைத்தார் ரூ.450-ல் இருந்து விற்பனை செய்யப்பட்டது.
பூக்களின் விலை கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகவே இருந்தது. செவ்வந்திப்பூ ஒரு முழம் ரூ.60-க்கும், கதம்பம் ஒரு முழம் ரூ.50-க்கும், மல்லிகை பூ ஒரு முழம் ரூ.60-க்கும், முல்லை பூ ஒரு முழம் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிள் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.100-ல் இருந்து 160-க்கும், மாதுளை பழம் கிலோ 160-க்கும், ஆரஞ்சு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.150 வரையிலும், சாத்துக்குடி, பன்னீர் திராட்சை ஆகியவை தலா கிலோ ரூ.100-க்கும், விற்பனை செய்யப்பட்டது.மேலும் அலங்கார பொருட்களின் விற்பனையும் படுஜோராகவே நடந்தது.
சரஸ்வதி படங்களும் சாலையோர கடைகளில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க பாரிமுனையில் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.