ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது ஏன்? விளக்கம் அளித்த மத்திய மந்திரி!
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது ஏன்? என்பது குறித்து மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்தார்.
கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, ரஷியா தனது கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் விற்பனை செய்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட இந்தியா அதிக அளவில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.
இதற்கிடையில்,அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதித்தார்.இந்தநிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வருகிற அக்.1-ம் தேதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்து உள்ளார்.
மேலும் ரஷியாவுடன் கச்சா எண்ணெய் வாங்கி வர்த்தகம் செய்வதால் இந்தியாவுக்கு அபராத வரியும் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.இந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க உலக நாடுகள் தடை விதிக்காததால் தான் இந்தியா தொடர்ந்து வாங்குகிறது. ரஷ்யா மீது தடை விதித்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் பிரச்னைகள் உருவாகும்.
பிரச்சினைகள் ஏற்படும் என்பதால்தான் ரஷிய கச்சா எண்ணெய்க்கு உலக நாடுகள் தடை விதிக்காமல் உள்ளன. ஈரான், வெனிசூலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க சர்வதேச தடை உள்ளதால் இந்தியா அதனை மதித்து நடக்கிறது. ஐரோப்பிய யூனியன், துருக்கி, ஜப்பான் போல ரஷிய கச்சா எண்ணெயை உச்ச வரம்பு விலையில் இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.