நாளை மறூநாள் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு: தேர்வர்களுக்கு அறிவுரை சொன்ன டிஎன்பிஎஸ்சி!
நாளை மறூநாள் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடைபெறும்போது 9.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்- 2 மற்றும் குரூப்-2ஏ-ல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை தேர்வு நாளை மறூநாள் (28.09.2025) அன்று முற்பகல் நடைபெற உள்ளது. இத்தேர்வினை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 1,06,213 தேர்வர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 1,905 தேர்வுக் கூடங்களில் எழுதவுள்ளனர்.
இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும்தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமுள்ள 1,905 தேர்வுக் கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கிராப் செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று அதாவது நாளை மறுநாள் முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். 09.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும், தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனத்தையும் எடுத்துச் செல்லக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.