கவர்னர் திருப்பி அனுப்பும் மசோதா அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளது.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்!

Loading

கவர்னர் திருப்பி அனுப்பும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம் செய்தது.

கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக் கோரும் அரசின் ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து தீர்ப்பு கூறியது. அதில் கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை எதிர்த்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்திருந்தது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு ஆலோசனை கருத்தை பெறும் வகையில் ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பி அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பான மனுவை தலைமை நீதிபதி அடங்கிய அரசியல்சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 6-வது நாளாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-கவர்னர் திருப்பி அனுப்பும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளது. அதேபோல, மாறும் சூழல், கொள்கைகள் காரணமாக அதனை மீண்டும் நிறைவேற்றாமல் கைவிடும் அதிகாரமும் சட்டப்பேரவைக்கு உண்டு. கவர்னர் நிறுத்திவைக்க அல்லது கைவிட அதிகாரம் இல்லை.

கவர்னர் தனிப்பட்ட முறையில் எந்த மசோதா மீதும் முடிவெடுக்க முடியாது. கவர்னர் சூப்பர் முதல்-அமைச்சராக நினைத்து செயல்பட முடியாது. அந்த அதிகாரத்தை கவர்னருக்கு அரசியல் சாசனம் வழங்கவில்லை. அதே நேரத்தில், சட்டப்பேரவை கூடாத நேரத்தில் அமைச்சரவையின் ஆலோசனைப்படி அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார். தொடர்ந்து மனு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

0Shares