புதிய தொழிற்புரட்சி..ஜப்பானுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!
இந்தியாவும்-ஜப்பானும் நெருங்கிய ஒத்துழைப்பை கொண்டுள்ளது. ஜப்பானும், இந்தியாவும் இணைந்தால் புதிய தொழிற்புரட்சி ஏற்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு ஜப்பான் புறப்பட்டு சென்றார். இதனை தொடர்ந்து ஜப்பானில் நடைபெறும் 15வது இந்தியா – ஜப்பான் வருடாந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 31ம் தேதி சீனா செல்கிறார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அமெரிக்காவுடன் வர்த்தக போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கூறியதாவது:-
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் மாற்றம் குறித்து நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இன்று, கொள்கையில் வெளிப்படைத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய தன்மை உள்ளது. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் மற்றும் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.
இந்தியாவில் வலுவான வங்கித் துறை, குறைந்த பணவீக்கம் மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் உள்ளன. சுமார் 700 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய செலாவணி இருப்பு இந்தியாவில் உள்ளது.
இந்த வளர்ச்சிக்குப் பின்னால் ஜிஎஸ்டி மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான சீர்திருத்தங்கள் போன்ற முக்கிய திட்டங்களை எடுத்துக்காட்டுகிறது.
சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற எங்கள் அணுகுமுறை இந்த மாற்றத்திற்குப் பின்னால் உள்ளது. இப்போது இதில் புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறோம். வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம். வணிகங்களுக்கு ஒற்றைச் சாளர ஒப்புதலை வழங்கி உள்ளோம்.
ஜப்பான் தொழில்நுட்பமும், இந்தியாவின் திறமையும் இணைந்து புதிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும். மெட்ரோ முதல் செமி கண்டக்டர் வரை இந்தியாவும்-ஜப்பானும் நெருங்கிய ஒத்துழைப்பை கொண்டுள்ளது. ஜப்பானும், இந்தியாவும் இணைந்தால் புதிய தொழிற்புரட்சி ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.