பல இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்காதது ஏன்? தமிழக அரசை சாடிய இந்து அதிரடிப்படை!
![]()
சென்னையில் பல இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் இது போன்ற செயல்களில் அரசு ஈடுபடாமல் சிலைகளை நிறுவ தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அதிரடிப்படை நிறுவனத் தலைவர் ராஜகுரு அரசை வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்து அதனை மூன்று நாட்களுக்கு அப்புறம் நீர்நிலைகளில் கரைப்பர். அந்த வகையில் இந்த வருடம் நாளை விநாயகர் சதுர்த்தி பெருவிழா நடைபெற உள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .ஆங்காங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை எம்ஜிஆர் நகரில் இன்று இந்து அதிரடிப்படை நிறுவனத் தலைவர் ராஜகுரு ஏற்பாட்டில் 1008 விநாயகர் சிலை இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது எம்ஜிஆர் நகரில் நடைபெற்றது,
இதில் இந்து அதிரடிப்படை நிர்வாகிகள் மற்றும் நிறுவனத் தலைவர் ராஜகுரு கலந்து கொண்டு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை இலவசமாக வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர். தமிழக அரசு ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் ஒரே விதமாக செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். விநாயகர் சிலை வைப்பதற்கு அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் பல இடங்களில் இந்து மக்கள் கடுமையான இன்னல்களை சந்தித்து வருவதாக வேதனையுடன் குறிப்பிட்டார். அது மட்டும் இல்லாமல் வரதட்சணை கொடுமையால் திருப்பூரில் பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த அவர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் பல இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் இது போன்ற செயல்களில் அரசு ஈடுபடாமல் சிலைகளை நிறுவ தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தினார்.

