பேச்சுவார்த்தை தோல்வி – திட்டமிட்டபடி போராட்டத்தில் குதித்த மீனவர்கள்!
தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடம் ராஜா நகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து ராமேசுவரம்- தாம்பரம் ரெயிலை மறித்து போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
61 நாட்கள் தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 55-க்கும் மேற்பட்ட மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை விடுவிக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டமும் நடத்திவரும் நிலையில் இன்று மாலை 3 மணிக்கு தங்கச்சிமடம் ராஜா நகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து ராமேசுவரம்- தாம்பரம் ரெயிலை மறித்து போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று மாலை ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ராஜமனோகரன் தலைமையில் மீனவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டமும் தோல்வியில் முடிவடைந்தது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் தலைமையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தை கூட்டமும் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.