சிறுமிக்கு பாலியல் தொல்லை – மலையாள நடிகை கைது, 2-ம் நாளாக விசாரணை!
சினிமாவில் நடிக்க வைப்பதாக 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான மலையாள நடிகையிடம் 2-வது நாளாக இன்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகையான மீனு குரியன் என்ற மீனு முனிர் கடந்த 2014-ம் ஆண்டு தனது உறவினரின் 16 வயது மகளை, சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி சென்னைக்கு அழைத்து வந்தார்.
பின்னர் அண்ணா நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று 5 பேரிடம் சிறுமியை அறிமுகம் செய்துள்ளார் நடிகை மீனு குரியன்,
அப்போது அங்கிருந்த 4 பேரில் இருவர் , சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதையடுத்து கேரளா சென்ற அந்த சிறுமி, பயம் காரணமாக இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனுமதியுடன் கடந்த 2024-ம் ஆண்டு எர்ணாகுளம் மூவாட்டு புழா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் சென்னை அண்ணா நகர் பகுதியில் நடந்ததால் இந்த வழக்கு சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் கேரள மாநிலம் சென்ற அவர், நடிகை மீனு குரியனை கைது செய்து சென்னை அழைத்து வந்தார். இது குறித்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான நடிகை மீனு குரியனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணைக்கு பிறகுதான், சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யார், யார்? என்பது பற்றி தெரியவரும். அதன்பிறகு அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.