63 மாவட்டங்களில் 50%க்கும் மேற்பட்ட குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு – மத்திய அரசு தகவல்!
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, 63 மாவட்டங்களில் உள்ள குழந்தைகளில் 50%க்கும் அதிகம் வளர்ச்சி குறைபாடுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஜூன் மாதத்திற்கான ஊட்டச்சத்து கண்காணிப்பு தரவுகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில் அதிக அளவிலான குழந்தைகள் வளர்ச்சி குறைபாடுள்ள மாவட்டங்களில் மராட்டியத்தின் நந்தூபார், ஜார்க்கண்ட்டின் மேற்கு சிங்பூம் , உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் , மத்தியபிரதேசத்தின் சிவபுரி , அசாமில் போங்கைகான் ஆகியவை முன்னிலையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்லாமல் அங்கன்வாடிகளில் 0 முதல் 6 வயதுடைய 8.19 கோடி குழந்தைகளில் 35.91 சதவீதம் பேர் வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களாகவும், 16.5 சதவீதம் பேர் எடை குறைவாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உள்ள 63 மாவட்டங்களில் 34 மாவட்டங்கள் உத்தரபிரதேசத்தில் உள்ளன.மேலும் அந்த தரவுகளின்படி, நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில் அங்கன்வாடிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குழந்தைகள் நீண்ட காலத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை பெறாதபோது ஏற்படும் அவர்களின் வளர்ச்சி குறைகிறது என அந்த அறிக்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது..