கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம் … திருவள்ளூர் வருவாய்த் துறையினர் அதிரடி!

Loading

திருவள்ளூர் ஜெ.என் சாலையில் அமைந்துள்ள கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை திருவள்ளூர் வருவாய்த் துறையினர் ஜேசிபி மூலம் அகற்றினர்.

திருவள்ளூரில் மழை காலங்களில் கால்வாய்களில் செல்ல வேண்டிய மழை நீரானது ஆக்கிரமிப்பு காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்து விடுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர்.

திருவள்ளூர் மற்றும் காக்களூர் பகுதியில் இருந்து வெளியேறும் வகையில் அமைக்கப்பட்ட மழை நீரானது கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் அது நாளடைவில் ஆக்கிரமிப்பு செய்து மழை நீர் கால்வாய் இருக்கும் இடமே தெரியாமல் போனது. இந்நிலையில் தமிழகத்தில் கோடை காலம் முடிந்து மழை காலம் தொடங்க உள்ளதால் பொது மக்களின் தொடர் புகாரையடுத்து வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் நகரம் ஜெ.என் சாலையில் மழை நீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ள டீ கடை, குளிர்பானக் கடை, டிபன் கடை, மெக்கானிக் கடை என 10-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றினர். முறையாக நோட்டீஸ் கொடுக்காமல் அகற்றுவதாக ஆக்கிரமிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து பல முறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளதாகவும், பொது மக்கள் தொடர்ந்து விடுத்த புகாரையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலால் தற்போது ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்படுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். நகரின் முக்கிய சாலையில் இந்த ஆக்கிரமிப்புகள் ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

 

0Shares