அவனை சுட்டு கொல்லுங்கள்..பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய் கதறல்!
எனது மகளை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபரை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய் மனக்குமுறலை கொட்டிஉள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12-ந்தேதி மதியம் பள்ளிமுடிந்து சிறுமி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமி தனியாக செல்வதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி, பின்தொடர்ந்து சென்று ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் திடீரென அந்த ஆசாமி, சிறுமியின் வாயை கைகளால் பொத்தி அருகே இருந்த மாந்தோப்புக்குள் தூக்கி சென்றார். பின்னர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இதற்கிடையே சிறுமி வீட்டுக்கு சென்றபோது மர்ம நபர் மாந்தோப்புக்கு தூக்கி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மிகவும் ஆபத்தான நிலையில் எனது மகள் சிகிச்சை பெற்று வருகிறார்.உடடினயாக அந்த நபரை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும். எனது மகளுக்கு ஏற்பட்டதுபோல வேறு யாருக்கும் நிகழக்கூடாது. எனது மகளை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபரை சுட்டுக்கொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், “குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்கும். சிறுமிக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும்” என்று கூறினார்.