வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு

Loading

வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர் பயிலரங்கு இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. மத்திய அரசின் முக்கியமான முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு எடுத்துரைப்பதும் பல்வேறு வளர்ச்சி முன் முயற்சிகளை ஆழமாக புரிந்து கொள்ள உதவுவதும் இந்த பயிலரங்கின் நோக்கமாகும்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் பொறுப்பு வகிக்கும் திரு வி. பழனிச்சாமி இந்த நிகழ்வில் முக்கிய உரையாற்றினார். ஊடகவியலாளர்களுக்கான நலத்திட்டங்கள் உட்பட மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி எடுத்துரைத்த அவர், போலியான செய்திகளை தவிர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி சுட்டிக்காட்டினார். சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் உள்ளடக்கத்தின் அபாயம் குறித்தும் அவர் எச்சரித்தார்.  ஜனநாயகத்தில் ஊடகத்தின் முக்கியப் பங்களிப்பை எடுத்துரைத்த அவர், துல்லியமான பொறுப்புமிக்க செய்திகளை உறுதி செய்ய ஊடகவியலாளர்கள் தொடர்ந்து தங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல தலைவரும், உதவி பொது மேலாளருமான திருமதி ஷோபனா குமார் இந்தப் பயிலரங்கில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார்.  உலகளாவிய வேளாண் வர்த்தகத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் இயக்கம் பற்றி விரிவாக விவரித்த அவர், ஏற்றுமதிகளுக்கு உதவி செய்ய குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏற்றுமதியை அதிகரிக்க செய்யப்பட்டுள்ள உள்கட்டமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளையும், எடுத்துரைத்தார்.
இந்த பிராந்தியத்திலிருந்து வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த நிகழ்வின் போது வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் விஷ வெள்ளரிக்காய் ஏற்றுமதித் தொகுப்பு கூட்டாக கொடியசைத்து அனுப்பிவைக்கப்பட்டது சிறப்பம்சமாக இருந்தது.
சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூத்த மண்டல மேலாளர் திரு விக்ரம் சேத், தர்மபுரி இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திரு கோவிந்த ராஜூ, ஆகியோர்  அடல் ஓய்வூதியத் திட்டம், முத்ரா கடன் போன்ற அனைவரையும் உள்ளடக்கிய பல்வேறு நிதித் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்தப் பயிலரங்கில் 70-க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.
0Shares