பதிவுத்துறைக்கு பொதுமக்களின் நலன் கருதி பெயிரா கடிதம்.

Loading

பதிவுத்துறைக்கு பொதுமக்களின் நலன் கருதி பெயிரா கடிதம்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், ஆடி மாதம் தொடங்க இருப்பதை முன்னிட்டு மற்றும் எதிர்வரும் சுபமுகூர்த்த தினங்களான திங்கள் (14.07.2025) மற்றும் புதன்கிழமைகளில் (16.07.2025) கூடுதல் முன்பதிவு வில்லைகளை வழங்கிட ஆவண செய்யக் கோரி தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு பொதுமக்களின் நலன் கருதி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..

எதிர்வரும் திங்கட்கிழமை (14.07.2025) மற்றும் புதன்கிழமை (16.07.2025) சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டும் மற்றும் ஆடி மாதம் தொடங்க இருப்பதின் காரணமாகவும் மேற்கண்ட சுபமுகூர்த்த தினங்களில் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்ய திட்டமிட்டிருக்கும் பொது மக்களின் எண்ணிக்கையானது வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் குறிப்பாக பம்மல், பல்லாவரம், திருப்போரூர், படப்பை, செங்கல்பட்டு, ஆவடி, கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, தாம்பரம், திருப்பெரும்புதூர், நீலாங்கரை உள்ளிட்ட பல அலுவலகங்களில் சுபமுகூர்த்த தினங்களில் ஆவண பதிவு செய்ய தேவையான அளவிற்கு முன்பதிவு வில்லைகளை வழங்குவதில் பற்றாக்குறை நிலவுவதின் காரணமாக பெரும்பாலான பொதுமக்களுக்கு முன்பதிவு வில்லைகள் கிடைக்க பெறாமல் ஏமாற்றத்துக்கும், மனவருத்தத்திற்கும் உள்ளாவதை தவிர்க்கும் வகையிலும், ஆடி மாதம் தொடங்க இருப்பதனை கவனத்தில் கொண்டும்,

பொதுமக்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் பதிவுத்துறை மதிப்பளித்து எதிர்வரும் திங்கட்கிழமை (14.07.2025) மற்றும் புதன்கிழமை (16.07.2025) ஆகிய சுபமுகூர்த்த தினங்களில் அனைத்து மக்களும் ஆவண பதிவுகளை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் தேவையான அளவிற்கு கணிசமாக முன்பதிவு வில்லைகளை உயர்த்தி வழங்கிட வேண்டுகிறோம். இதன் மூலம் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்கள் மகிழ்ச்சியும் மற்றும் மனதிருப்தியும் ஒருங்கே கிடைக்க பெறுவார்கள்.

ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்கள் இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் மேற்கண்ட சுப முகூர்த்த தினங்களில் கூடுதலாக முன்பதிவு வில்லைகளை கணிசமாக உயர்த்தி வழங்கிட பதிவுத்துறை தலைவர் அவர்கள் வழிவகை செய்ய வேண்டுமென அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, பொதுமக்களின் நலன் கருதி பதிவுத் துறை தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

0Shares